அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து | Fine imposed on Chennai Corporation Commissioner cancelled

1368916
Spread the love

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டலமான ராயபுரம், துறைமுகம் பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் கவுன்சிலரும், வழக்கறிஞருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ராயபுரம் மட்டுமின்றி சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள விதிமீறல் கட்டிடங்களை அகற்றி, அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை மாநகராட்சி ஆணையர் அமல்படுத்தவில்லை என்று கூறி உயர் நீதிமன்றத்தில் ருக்மாங்கதன் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ராம், நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், இந்த தொகையை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து, அபராத உத்தரவை திரும்ப பெறக் கோரி மாநகராட்சி ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஐஏஎஸ் அதிகாரியான சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆஜராகி மன்னிப்பு கோரினார். அவரது சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதை ஏற்ற நீதிபதிகள், குமரகுருபரனுக்கு விதிக்கப்பட்டரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *