‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ படங்களின் மூலம் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை இயல்பும் யதார்த்தமுமாக சொன்னவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா.
அவர் மறைவிற்கு முன் உருவான ‘கெணத்த காணோம்’ படம் விரைவில் திரையை தொடவிருக்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் தயாரித்திருக்கும் இந்த படத்தின் கதை நாயகன் யோகி பாபுவுடன் லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபேக்கா, கவிதா பாரதி, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்துள்ளனர்.
‘கெணத்த காணோம்’ படப்பிடிப்பு நிறைவடைந்து, அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் சுரேஷ் சங்கையா காலமானார். அதன் பிறகு மொத்த படத்தையும் சுரேஷின் டீமில் உள்ள அத்தனை பேரும் ஒன்றிணைந்து படத்தை முடித்ததுடன், இப்போது ரிலீஸுக்கு ரெடி செய்துவிட்டனர்.

‘கெணத்த காணோம்’ படப்பிடிப்பு முழுவதும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக உடனிருந்தவர் அவரது மனைவி தனிஷ் பாத்திமா.
“ என்னோட கல்யாணத்துல இருந்து தொடங்குறேன். கல்யாணத்துக்காக என்னை அவர் (சுரேஷ் சங்கையா) பெண் பார்க்க வந்திருந்தார். எங்களது அரேஞ்சுடு மேரேஜ். எங்க அண்ணன் சினிமாவில் நடிக்கணும் விரும்பினார். நிறைய கதைகள் எழுதி வச்சிருந்தார். அதனால எனக்கும் சினிமாவுல பணிபுரியும் ஆர்வம் இருந்தது.
இதை அவர்கிட்ட சொன்னதும் ‘புத்தகங்கள் நிறைய படி. நாம பார்க்கற கிராமங்கள் வேற.. வாசிப்பில் உள்ள உலகம் வேறு..’னு சொல்லி புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்துவார். அவரும் புத்தகங்கள் நிறைய படிக்கிறவர். எங்க வீட்டுல அவ்வளவு புக்ஸ் இருக்குது.
சுரேஷ் சார் (கணவர்) அவரோட படங்களின் படப்பிடிப்புக்காக லொக்கேஷன் பார்க்க போகும் போது கூடவே என்னையும் அழைச்சிட்டு போவார். அவரோட கதை விவாதங்கள்ல என்னையும் கலந்துக்க வைப்பார். என் கருத்துக்களையும் அலசுவார். அவர் ஸ்கிர்ப்டை என்கிட்ட விவாதிப்பார். அந்த கதைகளை எல்லாம் நான் டைப்பிங் செய்வேன். இப்படி அவரோட பயணிச்சதுல ‘சத்திய சோதனை’ படத்துல இருந்து என்னை அவர் உதவி இயக்குநராக சேர்த்துக்கிட்டார். படப்பிடிப்பு அனுபவமும் தெரிஞ்சுக்க வச்சார்.
‘கெணத்த காணோம்’ கதையை மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவர் ரெடி பண்ணிட்டார். ஆனா, உடனடியாக தயாரிப்பாளர் கிடைக்கல. அதன் பிறகே தயாரிப்பாளர்கள் ரமேஷ் பாபு சார், ஜெகன் சார் வந்தாங்க. பொதுவாகவே அவர் பெரிய ஹீரோக்களை அணுக மாட்டார். தன்னோட கதைக்கு யார் பொருத்தமாக இருப்பாங்களோ அவங்களதான் தேர்வு செய்வார்.
மத்த கேரக்டர்களுக்கும் அந்த கதை மாந்தர்களுக்கான முகச்சாயல் கொண்டவங்களை தான் பயன்படுத்துவார். ஸ்கிரிப்ட்ல லாஜிக் இல்லைனு சொல்லிடக்கூடாது. கிராமத்து மனிதர்களோட வாழ்வு எப்படி இருக்குமோ அப்படிதான் காட்சிகளும் இருக்கணும் என்பதுல உறுதியா இருப்பார்.

இந்த கதைக்கு யோகிபாபு சார் ரொம்ப பொருத்தமா இருந்தார். அவரை நடிக்க வைக்க விரும்பினோம். ஆனா, ஒரு வருஷத்துக்கு அவரோட கால்ஷீட் ஃபுல்னால, அவருக்காக டைரக்டரும் காத்திருந்தார். சுரேஷ் சார், ‘காக்கா முட்டை’ படத்துல உதவி இயக்குநராக இருந்த போதிலிருந்து யோகி பாபு சாரை தெரியும்ங்கறதல ரெண்டு பேருமே படத்தை சிறப்பா கொண்டு வர்றதுல உறுதியா இருந்தாங்க.
அருப்புக்கோட்டை பக்கம் உள்ள கிராமங்கள்ல தான் படப்பிடிப்பு நடந்தது. கிளைமாக்ஸிற்காக ரொம்ப மெனக்கிட்டிருக்காங்க. கிராமத்துல குடிக்க தண்ணீர் வசதி இல்லைனா, அந்த கிராமத்து மக்கள் எப்படி பாதிப்படையறாங்க. கிராமத்துக்கு தண்ணி வசதி வந்ததா..? இப்படி சமூக அக்கறையோடு இந்த கதையை எழுதியிருக்காங்க.
இந்த படம் முடியற தருவாயில் தான் அவருக்கு உடல்நலமில்லாமல் போச்சு. அவர் இறப்பிலிருந்து ரொம்பவே சிரமப்பட்டுத்தான் நான் மீண்டிருக்கேன். அதனால போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளின் போது என்னால இருக்க முடியல. இப்ப படம் நல்ல முறையில் வந்திருக்கறதை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு.

நான் விவசாயத்துல டிகிரி படிச்சிருக்கேன். அவர் எங்கே போனாலும் என்னையும் கூடவே அழைச்சிட்டு போவார். நிறைய கதைகள் எழுதி வச்சிருக்கார். அதையெல்லாம் யார்கிட்டேயும் கொடுக்காமல், நானே இயக்கணும்னு விரும்புறேன். அவரோட கதையை நான் டைரக்ட் பண்ணும் போது என்கூட அவரும் இருக்கறா உணர்வேன்.
மகள் ஆதிரா ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறார். மகன் ஆருத்ராவுக்கு ஒரு வயசு ஆகுது. அடுத்த வருஷம் நான் பெரிய இயக்குநர்கள்கிட்ட ஒரு படம் பணியாற்றிவிட்டு, கணவரோட கதைகளை படமாக்குறதுல கவனம் செலுத்தப் போறேன். ‘மண்டேலா’ படத்துல யோகிபாபு சாருக்கு ஒரு பெரிய பெயர் கிடைச்சது மாதிரி ‘கெணத்த காணோம்’ல அவருக்கு நல்ல பெயர் அமையும்னு நம்புறேன்” என்கிறார் தனிஷ் பாத்திமா.