கடந்த ஐந்து வருடங்களாக சிறையில் உள்ள பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாமுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம், வன்முறையாக வெடித்தது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் 53 பேர் உயிரிழந்த நிலையில் 700-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து ஜே.என்.யு முன்னாள் மாணவர்களான உமர் காலித், சர்ஜில் இமாம் உள்ளிட்ட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உமர் காலித் உள்ளிட்டோர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளனர். இதற்கிடையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உமர் காலித் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை, கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி நீதிமன்றமும், அக்டோபர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தன.