சென்னை: “ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல் துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவுக்கு அவல நிலைக்கு சட்டம் – ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்,” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன். ஆர்ம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதிக்கும், பகுஜன் சமாஜ் தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல் துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவுக்கு அவல நிலைக்கு சட்டம் – ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
ஆர்ம்ஸ்ட்ராங்கின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நடந்தது என்ன? – பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.