இன்னொருபுறம் உடல் நலத்துக்கும் சமுதாயத்துக்கும் தீங்கான புகையிலை உள்ளிட்ட பொருள்கள் மீதான 28% ஜி.எஸ்.டி. இப்போது 40% என்று அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
33 உயிர் காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி, வரி விதிப்பில்லாத 0% வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல மருந்துகள் 12%, 5% வரம்புகளில் இருந்து 0% என மாறி இருக்கிறது. நோய் கண்டறியும் சோதனைக் கருவிகள் மீதான வரி 5% வரம்பில் சேர்க்கப்பட்டிருப்பது, தனிநபர் மற்றும் ஆயுள் காப்பீடு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது உள்ளிட்டவை வரவேற்புக்குரிய மாற்றங்கள்.
பட்ஜெட்டில் வழங்கப்பட்ட வருமான வரிச் சலுகைகளும், இப்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களும் பிரதமர் கூறுவதைப்போல நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால், அரசுக்கு ஏறத்தாழ ரூ.57,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மக்களிடம் கூடுதலாக செலவழிக்க ரூ.57,000 கோடி இருக்கும் என இதைப் பார்க்க வேண்டும்.
இதன் பலனை இந்தியாவின் தொழில்-வர்த்தகத் துறை அடையப் போகிறது. தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தை அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையாக வழங்கினால் மட்டும்தான் பிரதமரும், நிதியமைச்சரும் எதிர்பார்க்கும் பொருளாதார இயக்கம் உருவாகும்.
வரிச் சலுகைகளை அவர்கள் அனுபவிக்காமல் பொதுமக்களுக்கு மடைமாற்றம் செய்கிறார்களா என்பதையும், அப்படி வழங்காதவர்களை தயங்காமல் தண்டிப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மோட்டார் வாகனங்கள், ஏ.சி.க்கள் உள்ளிட்ட பொருள்களின் மீது தாராளம் காட்டும் நிறுவனங்கள், குறைந்த மதிப்புள்ள மக்களின் அன்றாட உபயோகப் பொருள்களிலும் முழுமையாக சலுகைகளை வழங்குகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அதுதான் அரசின் நோக்கத்தை நிறைவேற்றும்.
இப்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகைகள் பிகார் தேர்தலை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது அவர்களது அச்சத்தின் வெளிப்பாடு. டிரம்ப்பின் வரிவிதிப்புக்கான எதிர்வினை என்று பார்ப்பதுதான் ஆக்கபூர்வ சிந்தனை.
பிரதமர் தனது நேற்றைய உரையில் குறிப்பிட்டதுபோல “சுதேசிப் பொருள்களை விற்பதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியப் பொருள்கள் தனது தரத்துக்கான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறவேண்டும்’. ஜி.எஸ்.டி. சீரமைப்பு கடைக்கோடி சாமானியனைச் சென்றடைய வேண்டும். அடுத்தகட்டமாக ஜி.எஸ்.டி.3.0 தாமதமின்றி நடைமுறைக்கு வரவேண்டும்.