வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்யவுள்ளார்.
பிரதமர் மோடி ஆக. 10, சனிக்கிழமையில் கேரளத்தின் கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து கல்பெட்டாவுக்கு சென்று, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக சென்று ஆய்வு செய்யவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சுமார் 10,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர், சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு திரும்பிச் செல்கிறார்.
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிப்பதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்கான விரிவான தொகுப்புக்கு ஒப்புதல் அளிப்பதிலும் பிரதமரின் வருகை முக்கியமானதாக இருக்கும் என்று கேரள அரசு நம்புகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததாவது, “வயநாடு நிலச்சரிவுகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, பேரிடரின் தீவிரத்தை ஆராய்ந்து, இதுதொடர்பாக ஓர் அறிக்கையை சமர்ப்பிக்க உள்துறை அமைச்சகம், ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. விரிவான மறுவாழ்வுத் தொகுப்பைப் பெறும் என்று கேரளம் நம்புகிறது.
பேரழிவின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கும், மறுவாழ்வு மற்றும் நகரத் திட்டங்களுக்கும் மத்திய அரசிடமிருந்து உதவி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து சாதகமான முடிவு வரும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில், வருகிற சனிக்கிழமையில் வயநாட்டுக்கு பிரதமர் மோடி வருகைதர உள்ளார்” என்று கூறியுள்ளார்.
வயநாட்டில் தொடா் கனமழையால் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உருக்குலைந்தன.
வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள், உயிரோடு புதையுண்டனா். இப்பேரழிவு, கேரளம் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனா். மேலும் பலரை காணவில்லை. எனவே, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 400-ஐ தாண்டக் கூடும்.