‘ஆக. 27ல் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்’ – போக்குவரத்து ஓய்வூதியர்கள் அமைப்பு அறிவிப்பு | Wage Contract Negotiations for Transport Workers on August 27th: Demand to Allow Union Executives

1300652.jpg
Spread the love

சென்னை: வரும் 27ம் தேதி போக்குவரத்து ஓய்வூதியர்கள் சார்பில் தமிழகம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன், “போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மருத்துவக் காப்பீடு வழங்கப்படவில்லை.

இது தொடர்பானவற்றுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஆக.16 முதல் இன்று வரை வீடுதோறும் தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்தோம். இதன் தொடர்ச்சியாக ஆக.27ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் 9 இடங்களில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதன் ஒரு பகுதியாக சென்னை, பல்லவன் இல்லம் அருகே மறியல் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பாரபட்சமின்றி தொழிற்சங்க நிர்வாகிகளை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன், “தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நாளை மறுநாள் (ஆக.27) காலை 11 மணியளவில் குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருவருக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்பும் சில சங்கங்களைச் சேர்ந்த கூடுதல் பிரதிநிதிகளை கூட்ட அரங்குக்கு அனுமதிக்கப்படுவது உண்டு. எனவே, பாரபட்சமின்றி சங்க வாரியாக 2 பிரதிநிதிகளை பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் கலந்து பேசி உடனடியாக முடிவு எடுக்க முடியும். இது தொடர்பாக பேச்சுவார்த்தையின் கூட்டுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *