“ வலுத்திலுத்தும் தங்கையவள்
வர மாட்டேனென்றதினால்
கழுத்தறுத்து வெட்டினார்கள் காரிகையை அன்னேரம்.
வெட்டுப்பட்ட அவள்தலைதான் வேகமாக உருண்டைதையா!…”
“ திருநவேலிக்கு மேக்க தென்காசிக்கு போறவழியில பாவூர் இருக்குல… அங்க ஏழு அண்ணமாருக்கு ஒத்தைக்கு தங்கச்சி ஒருத்தி இருந்திருக்கா. அவ பேரு பொயிலாம் பூச்சி. இவங்க பள்ளர் சமூகத்தை சேர்ந்தவங்க. அவ அம்மையும் அப்பனும் வரம் இருந்து பெத்தபிள்ளைங்கிறதுனால பெத்தவங்க செத்தப்பெறவு தங்கச்சி மேல பாசங்கொண்டு ஏழு அண்ணமாருங்க தான் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி குடுத்து வளத்துட்டு வந்துருக்காங்க.
அவ அண்ணங்க ஆம்பிளையால மட்டும் பெண்பிள்ளையை வளக்க முடியாதுன்னு நினைச்சி ‘என் தங்கச்சியை நல்லா பாத்துக்கிடணும்ன்னு சொல்லி தான்’ கல்யாணமே முடிச்சிருக்காங்க. அதுக்கேத்த மாதிரி மையினி மாரும் கண்ணுக்கு கண்ணாதான் நாத்தனாரை பாத்திருக்காவ. பிள்ளையும் ஆளும் அழகுமா நல்லா வளந்திருக்கா.
ஒரு நாளைக்கு கூடச்சேர்ந்த பிள்ளைகளோட கிணத்துல இருந்து தண்ணீ எடுத்துட்டு வரேயில பட்டபிரான் மாட்டைப் பத்திட்டு போயிருக்கான். இவேன் யாருன்னு கேட்டா கிழக்க வல்லநாட்டுக்காரன். தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஆளு. இவன் தொழிலே மாட்டு வியாபாரந்தான். அவன் மாட்டைப்பத்திட்டு போவயில ரெண்டு பேரும் பேசுக்கிடுதாவ. அவனுக்கும் அந்தப் பிள்ளைய பாத்ததும் பிடிச்சிருக்கும் போல, கொஞ்ச நாளைக்கு அப்பறம் பொயிலாவோட மூத்த அண்ணனை பாத்து தன் வியாபாரத்துக்கு உதவிக்கு கேட்டு வர்றான்.
அப்படியே ரெண்டு பேருக்கும் பழக்கம் உண்டாகி விரும்ப ஆரம்பிச்சிடுதாவ. அடிக்கடி ரெண்டு பேரும் ஒண்ணா நின்னு பேச ஆரம்பிக்க ஒருநாள் பொயிலாவோட மூத்த மையினி இதைப் பாத்திட்டு ‘‘என்ன தம்பி, ஆம்பிள இல்லாத வீட்டில் சமஞ்ச புள்ளகிட்ட பேசிட்டு இருக்கேளே.’’ன்னு கேட்டிருக்கா. உடனே பொயிலா குறுக்க வந்து ‘‘மைனி, இவிய இப்பத்தான் வந்தாவ ’’ன்னு சொல்லிருக்கா. அவளுக்கு அப்போவே ஒரு சந்தேகம் வந்திருக்கு.