ஆங்கிலேயர்கள் காலத்து ஆர்டர்லி முறையை அனுமதிக்க முடியாது: சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு | Judges order to take action against prison officials

1337331.jpg
Spread the love

ஆங்கிலேயர்கள் காலத்து காலனி ஆதிக்க ஆர்டர்லி முறையை இப்போதும் பின்பற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், சிறைக் காவலர்களை ஆர்டர்லியாக பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க உள்துறைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.

புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஒரு அறையில் 60 கைதிகள் வரை அடைக்கப்பட்டுள்ளதாகவும், புழல் சிறையில் ஒரு ஷிப்டுக்கு 60 வார்டன்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 15 வார்டன்கள் மட்டுமே உள்ளதாகவும், மீதமுள்ள வார்டன்கள் ஆர்டர்லியாக சிறைத்துறை அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்ய பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சீருடைப் பணியாளர்களை அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு ஆர்டர்லியாக பயன்படுத்தக் கூடாது என பலமுறை உத்தரவிட்டும் அந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இதை ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலர், தமிழகம் முழுவதும் உள்ள சிறை வார்டன்கள் மற்றும் சிறைக் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி மற்றும் உளவுத்துறை போலீஸாரின் உதவியுடன் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் காலத்து காலனி ஆதிக்க ஆர்டர்லி முறையை இப்போதும் பின்பற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் சிறைத்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுபோல அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகளின் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் வார்டன்கள் மற்றும் காவலர்களைக் கண்டறிந்து அவர்களை சிறைப் பணிகளுக்கு உடனடியாக மாற்ற உள்துறைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த உத்தரவை மூன்று வாரங்களில் அமல்படுத்தி அந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவ.29-க்கு தள்ளிவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *