வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (ஜூலை 20) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நிஹர் சுல்தானா 59 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷோமா அக்தர் அதிரடியாக 14 பந்துகளில் 25 ரன்கள் (5 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை தரப்பில் பிரபோதனி மற்றும் பிரியதர்ஷினி இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுகந்திகா குமாரி, கவிஷா தில்ஹாரி மற்றும் சமாரி அத்தபத்து தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக விஷ்மி குணரத்னே 48 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, ஹர்ஷிதா சமரவிக்கிரம அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நஹிதா அக்தர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.