புதுச்சேரி: நான் பள்ளியில் படிக்கும் போது ஆசிரியரின் சைக்கிளை துடைப்பதாக கூறி அதை திருட்டுதனமாக எடுத்துச் சென்று ஓட்டிய அனுபவம் உள்ளதாக இந்திய திரைப்பட விழவில் முதலமைச்சர் ரங்கசாமி தனது சிறு வயது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
குரங்கு பெடல் என்ற தமிழ் திரைப்படத்திற்கு இந்திய திரைப்பட விழாவில் புதுச்சேரி அரசு சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக்குழு, அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து இந்திய திரைப்பட விழா 2023 மற்றும் சிறந்த திரைப்பட இயக்குனருக்கு விருது வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தலைமை தாங்கி 2022-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட “குரங்கு பெடல்” என்ற தமிழ் திரைப்படத்திற்காக அதன் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி பாராட்டினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, திரைப்படத்தின் வாயிலாக நல்ல கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகிறது என்றும், புதிய தொழில்நுட்பம் வாயிலாக ஒரு பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.