ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த அனுமதி: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு | tn School Education Department to conduct special TET exams for teachers

1379657
Spread the love

சென்னை: அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்தில் 2011-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன்பின்னர் தமிழகத்தில் டெட் தேர்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பணியிலுள்ள ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த செப்.1-ம் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.76 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சட்ட வல்லுநர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டது. அதன்படி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர்கள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிகளவிலான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய சூழலில் உள்ளனர். பதவி உயர்வுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, 4 மாதங்களுக்கு ஒன்று வீதம் ஆண்டுக்கு 3 முறை சிறப்பு டெட் நடத்தினால் பாதிப்பில் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறுவர்.

அதனுடன் ஆசிரியர்களுக்கு தகுதிவாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு வாரஇறுதி நாள்களில் பணியிடை பயிற்சி வழங்கலாம். எனவே, இந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக கருதி தனி டெட் தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஆணையிட வேண்டுமென கூறியுள்ளனர்.

இந்த கருத்துருகளை பரிசீலனை செய்து அதையேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் 2026-ம் ஆண்டில் ஜனவரி, ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களில் கூடுதலாக சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுதவிர 2026-ம் ஆண்டில் நடைபெறும் டெட் தேர்வு முடிவுகளுக்கு பிறகு மீதமுள்ள தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2027-ம் ஆண்டில் தேவைக்கேற்ப டெட் நடத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு டெட் தேர்வெழுதவுள்ள ஆசிரியர்களுக்கு எஸ்சிஇஆர்டி பயிற்றுநர்களை கொண்டு மாவட்டந்தோறும் இணைய வழியில் சிறப்பு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *