தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பள்ளியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியர் ரமணியின் உடலுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், எம்எல்ஏக்கள் அசோக்குமார், அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற அமைச்சர்கள், ஆசிரியர்களிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தனர்.
பின்னர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியது: இந்த நாள் வேதனைக்குரிய நாளாக அமைந்து விட்டது. ஆசிரியையின் சொந்த பிரச்சினையாக இருந்தாலும், பள்ளிக்குள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்று காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்பவர்களுக்காக வழக்கறிஞர்கள் யாரும் வாதாட வரக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக வேண்டுகோள் வைக்கிறேன். இவர்களை போன்றவர்கள் கண்டிப்பாக தண்டனைக்குரியவர்கள். இவருக்கு கொடுக்கப்படும் தண்டனையானது ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
ஒரு வாரம் விடுமுறை: மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டு இருக்கும். எனவே, பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது. பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘கொலையாளி மீது கடும் நடவடிக்கை தேவை’ – புதுக்கோட்டை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் தெரிவித்துள்ளது: மல்லிப்பட்டினத்தில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். காவலாளிகளை நியமிக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றி, கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் மா.குமரேசன் தெரிவித்துள்ளது: கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கற்றல் குறைபாடு உடையவர்களை கண்டித்தாலோ, போதைப் பொருள் பழக்கத்தை தடுத்தாலோ ஆசிரியர்கள் தாக்கப்படுகின்றனர். எனவே, ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.