நடிகர் அருள்நிதி நடித்த டிமான்ட்டி காலனி – 2 திரைப்படத்தின் வசூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் ஆக.15 ஆம் தேதி வெளியானது.
ஒருசில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎஃப்எக்ஸ் என ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவதால், அடுத்த பாகம் உருவாகும் எனத் தெரிகிறது.
தங்கலான் படத்துடன் திரைக்கு வந்ததால், பெரிய வெற்றியைப் பெறுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் வாரத்தைவிட இரண்டாம் வாரம் அதிக திரைகளில் காட்சிப்படுத்தப்படுகிறது. சென்னையில் தங்கலானைவிட டிமான்ட்டி காலனி – 2 படமே அதிக திரைகளை வைத்திருக்கிறது.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 32 கோடியையும் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அருள்நிதி நடித்த படங்களிலேயே இதுவே அதிக வசூலை ஈட்டிய பிளாக்பஸ்டர் படமென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் வெளியாகியுள்ளதால் அங்கும் வசூலைக் குவிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.