ஆட்சியாளர்களின் அதிர்ச்சியூட்டும் அசல் முகம்!

Spread the love

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘நானும் ஒரு விவசாயிதான்’ என மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரித்து, விவசாயிகளின் நெஞ்சை நெகிழ வைக்க முயற்சி செய்கிறார், டெல்டா மண்ணின் மைந்தரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். இதுமட்டும்தானா… விவசாயிகளின் இதயத்தைக் கவர்ந்து வாக்குகளை அள்ள, இன்னும் விதவிதமாகக் குட்டிக்கரணங்கள் அடித்து அசத்திக் கொண்டிருக்கிறார்.

தி.மு.க அரசின் 5 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனையைப் பறைசாற்றும் விதமாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில், ‘வேளாண்மைக்கு என்றும் முன்னுரிமை, இதுவே ஸ்டாலின் அரசின் முதற்கடமை, 5 ஆண்டுகளில் அரும்பணிகள்’ எனத் தேன் தடவிய வாக்கியங்களில் தம்பட்டங்கள் அடிக்கப்பட்டுள்ளன. `உச்சம் தொட்ட உணவு தானிய உற்பத்தி, நான்கே ஆண்டுகளில் 16.22 லட்சம் மெட்ரிக் டன்’ என தி.மு.க அரசு உரக்கச் சொல்கிறது. ஆனால், தமிழக அரசின் அசல் முகத்தை வெளிப்படுத்தும் விதமாக, திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் வெளியிட்டுள்ள சர்ச்சை கருத்துகள் விவசாயிகளைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன.

‘தமிழ்நாட்டில் விவசாயம், சுருங்கிக்கொண்டே வருகிறது. தற்போது 25% மக்கள் தான் வேளாண்மையில் ஈடுபடுகிறார்கள். எதிர்காலத்தில் இது ஒற்றை இலக்கத்துக்குச் செல்லக்கூடும். பொருளாதார வளர்ச்சியில் வேளாண் உற்பத்தியின் பங்களிப்பும் சுருங்கிக்கொண்டே வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தொழில்துறை கடந்த 5 ஆண்டு களில் வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. இது நல்ல விஷயம். பெரும் பான்மையான மக்கள், விவசாயத்தை விட்டு வெளியேறி வேறு துறைகளுக்குச் செல்லக்கூடும்’ என மகிழ்ச்சிப் பொங்கக் கூறியுள்ளார், ஜெயரஞ்சன்.

விவசாயம் வீழ்ச்சி அடைவதை மகிழ்ச்சி என்பது மிகவும் ஆபத்தானது. உணவு உற்பத்தி குறைந்து போனால், மிகப்பெரும் ஆபத்தை மக்கள் எதிர்கொள்ளக்கூடும். கொரோனா பரவல் பொது முடக்கம் தருணத்தை ஜெயரஞ்சன் கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போது, கார் கம்பெனிகள், தோல் தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் முன்பாகவா மக்கள் வரிசையில் காத்துக்கிடந்தனர்? மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் மற்றும் விவசாயப் பண்ணைகளில் அல்லவா தவம் கிடந்தனர்?

ஜெயரஞ்சனின் கருத்தை, அவருடைய தனிப்பட்ட கருத்தாகக் கருத முடியாது. தமிழ்நாட்டின் திட்டக்குழு துணைத் தலைவராகப் பொறுப்புமிக்க பதவி வகிக்கும் இவர், தி.மு.க அரசின் எண்ணத்தைதான் வெளிப்படுத்தியுள்ளார். கார்ப்பரேட் கம்பெனி களுக்கு காவடி தூக்குவதில் தமிழக அரசு அதிதீவிரம் காட்டி வருகிறது. விவசாயிகளை வெளியேற்றிவிட்டு, விளைநிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை, பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு, பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் ஜெயரஞ்சன் இப்படிப் பேசியுள்ளார்.

அதிதீவிரத் தொழில் வளர்ச்சித் திட்டங்களால், உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். தொழில் வளர்ச்சியால் ஏற்பட்டு வரும் பூமி வெப்பமயமாதலைக் கண்டு, உலக நாடுகள் மிகவும் பதறிப் போய்க் கிடக்கின்றன. ஜெயரஞ்சனின் கருத்துக்கு, அதாவது தி.மு.க அரசின் எண்ணவோட்டத்துக்கு விவசாயச் சங்கத் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். ஆட்சியாளர்களுக்கு விவசாயம் குறித்த ஆக்கபூர்வமான பார்வை தேவை. இது, தேர்தல் நேரம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *