“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்தி​லும் பங்கு” – திருமா ஆக்‌ஷனும் ஆதவ் அர்ஜுனா ரியாக்‌ஷனும்! | aadhav arjuna suspended from vck

1342720.jpg
Spread the love

கட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியதால், விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் விசிகவுக்கும் தவெகவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவுடனான கூட்டணியில் விசிக இருந்துவரும் நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்றும், தொடர்ந்து இவ்வாறு அவர் பேசி வருவதற்கு, அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாடுகள் கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும், நம்பகத்தன்மையையும் கேள்விக்கு உள்ளாகும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இத்தகைய போக்குகள், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் கட்சியினருக்கு ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கட்சிச் தலைவர், பொதுச்செயலாளர்கள் என மூவர் அடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில் ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கடந்த 7-ம் தேதி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சட்டப்பேரவையில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த, விசிக தலைவர் திருமாவளவன், ஃபெஞ்சல் புயலையொட்டி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முதல்வர் உடனான சந்திப்புக்கும், ஆதவ் அர்ஜுனா நீக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. 6 மாத கால இடைநீக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகளை பொறுத்தே மீண்டும் அவரை கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படும். விசிக ஒரு கூட்டணியில் இருக்கிறது. அந்த கூட்டணி நலன்களுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசும்போது, திருமாவளவன் அவரை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாரா, திருமாவளவன் பேச வேண்டியதை எல்லாம் அவர் பேசுகிறாரா, அவருடைய ஒப்புதலுடன்தான் இவர் பேசுகிறாரா என பொதுவெளியில் பலரும் விமர்சிக்கின்றனர்.

இது தலைமையின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. அதனால்தான் கட்சி முன்னணி நிர்வாகிகளுடன் இணைந்து பேசி அவரை இடைநீக்கம் செய்துள்ளோம். இதற்காக திமுக தரப்பில் இருந்து எனக்கு எந்த நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. அதேபோல் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில், நான் பங்கேற்க முடியாது என்று நான் எடுத்தது சுதந்திரமான முடிவு. விசிகவுக்கும், தவெகவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே ஆதவ் அர்ஜுனா வெளி​யிட்ட அறிக்கை​: அதிகாரத்தை ஒடுக்​கப்​பட்ட மக்கள் அடைய வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் தான் விசிக​வில் எனது பயணத்தை தொடங்​கினேன். நான் கட்சி​யில் என்ன பணி செய்​தேன் என்பதை அடிமட்ட தொண்​டர்கள் நன்கு அறிவர். ஒடுக்​கப்​பட்ட மக்களுக்கான ‘ஆட்​சி​யிலும் பங்கு, அதிகாரத்​தி​லும் பங்கு’ என்ற முழக்​கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்​கும் வரை தொடர்ந்து முழங்​கிக்​கொண்டு இருப்பதே நேர்​மையான அரசி​யல். குறிப்பாக ‘ஒடுக்​கப்​பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்து​விடக் கூடாது என்று நினைக்​கும் மனநிலை​தான் மன்னர் பரம்​பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்​தமாக இங்கு பதிவு செய்​கிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்​தைத் தட்டிப்​பறிக்​கும் அந்த மனநிலையை, எதிர்​காலத்​தில் தேர்தல் பிரச்​சா​ரத்​தின் மூலம் உடைத்​தெறி​யும் பணியில் ஈடுபடு​வேன். சமூக அநீதி​களுக்கு எதிரான எனது குரல் சமரசமின்றி ஒலிக்​கும். இவ்​வாறு கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *