“ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பாதுகாக்க அதிமுக துணை நிற்கும்” – இபிஎஸ் | aiadmk leader edappadi k palaniswami election campaign at dindigul natham

Spread the love

நத்தம்: “ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களைப் பாதுகாக்க அதிமுக என்றும் துணை நிற்கும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய ஊர்களில் மேற்கொண்டார். நத்தத்தில் அவர் பேசியது: “விவசாயிகள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதி நத்தம். விவசாயத்தை நம்பி வாழுகின்ற மக்களுக்கு அதிமுக ஆட்சியில் பல நன்மைகள் கிடைத்துள்ளது. இரண்டு முறை பயிர்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடிமராத்து திட்டம் கொண்டுவந்து கண்மாய், ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளது. விவசாயிகள் 24 மணி நேரம் மோட்டார் இயக்க மும்முனை பிரச்சாரம் கொடுத்தோம். விவசாயிகளை கண்ணை இமைகாப்பது போல் காத்த அரசு, அதிமுக அரசு. விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடு, விலையில்லா ஆடு, கோழி கொடுத்து நன்மை செய்த அரசு, அதிமுக அரசு.

திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் தான் நிறைவேற்றியுள்ளளனர். 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களையும் அதிகரிக்கவில்லை. சம்பளமும் உயர்த்தவில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களை பாதுகாக்க அதிமுக என்றும் துணை நிற்கும்.

திருமண உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தியது அதிமுக அரசு. இந்த திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித் திட்டம் தொடரும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

திமுக ஆட்சி வந்தவுடன் மக்களுக்கு நன்மை பயக்கும் அதிமுக கொண்டுவந்த திட்டங்களை ரத்து செய்தனர். உதாரணமாக, அம்மா மினி கிளினிக் திட்டம். இதை சிறந்த திட்டம் என மக்கள் கூறினர். ஏழைக்கு சிகிச்சையளிக்கும் திட்டத்தை ரத்து செய்த அரசு, திமுக அரசு. அதிமுக அரசு அமைந்தவுடன் 4,000 மினி கிளினிக் திறக்கப்படும்.

இறுதிவரை மக்களுக்காக உழைத்த தலைவர்கள் நமது தலைவர்கள்(எம்ஜிஆர், ஜெயலலிதா) அரசு பள்ளி மாணவர்களை திறமையானவர்களாக உருவாக்க அதிமுக ஆட்சியல் கொடுக்கப்பட்ட லேப்டாப் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சி வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

ஏழைகளுக்கு எதைச் செய்தாலும் ஸ்டாலினுக்கு பிடிக்காது. உரிமைத் தொகை கொடுத்ததாக முதல்வர் பேசுகிறார். தொடர்ந்து அதிமுகவினர் சட்டமன்றத்தில் கடுமையாக அழுத்தம் கொடுத்ததன் விளைவாக உரிமைத் தொகை வழங்கினார். இதை கொடுக்க வைத்தது அதிமுக. மக்கள் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 30 லட்சம் குடும்பத்தினருக்கு உரிமைத் தொகை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மக்களை ஏமாற்றுகின்ற அரசு, திமுக அரசு.

உங்கள் வாக்குகளை நம்பித்தான் திமுக மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளனர். இந்த அரசு தந்திரமாக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர். மக்களை ஏமாற்றிய அரசுக்கு சம்மட்டி அடி கொடுக்கவேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டதை பெரும்பாலும் நிறைவேற்றவில்லை. கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் அது மட்டும் இந்த ஆட்சியில் நடக்கிறது.

டாஸ்மாக்கில் 6,000 மதுக்கடைகள் இருக்கிறது. திமுகவினர் பார் எடுத்துக்கொண்டு முறைகேடாக விற்பனை செய்து ஒரு பாட்டிலுக்கு ரூ.10 என நான்கு ஆண்டுகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். இது மேலிடத்துக்குச் செல்கிறது. இந்த ஊழல் ஆட்சி தொடர வேண்டுமா?

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவராக 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தது அதிமுக அரசின் சாதனை. இதுபோன்ற ஒரு திட்டமாவது திமுக அரசு ஏழை மக்களுக்காக கொண்டு வந்துள்ளதா?

நத்தம் பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டுவந்து தாகத்தை தீர்த்த அரசு, அதிமுக அரசு. திமுக அரசால் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரமுடியவில்லை. நத்தம் பகுதியில் மா சாகுபடி அதிகம் உள்ளது. இந்த ஆண்டு மா சாகுபடி அதிகரித்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அதிமுக கோரிக்கை வைத்தது. ஆனால், இந்த அரசு வழங்கவில்லை.புளியை பாதுகாக்க குளிர்ப் பதன கிடங்கு வேண்டும் என புளி விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் குளிர்ப் பதன கிடங்கு இந்தப் பகுதியில் அமைக்கப்படும்” என்றார் எடப்பாடி பழனிசாமி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *