“ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறுவது அரசியல் கட்சிகளை திசை திருப்பவே…” – கே.பி.முனுசாமி விமர்சனம் | Vijay claim of participation in governance is to divert political parties – KP Munusamy

1340142.jpg
Spread the love

திருவண்ணாமலை: “அரசியல் கட்சிகளை திசை திருப்பவே ஆட்சியில் பங்கு என்று தவெக தலைவர் விஜய் சொல்லியிருக்கலாம்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் அதிமுக பணிகளை இன்று (நவ.19) கள ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவின் பணிகளை கள ஆய்வு செய்துள்ளோம். அரசு பணத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது தந்தைக்கு விழா எடுத்து வருகிறார். மேலும் தேவையில்லாத இடங்களில் கட்டிடம் கட்டி, அவருடைய பெயரை வைத்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியின் 4 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்து, அடிக்கல் நாட்டி ரூ.400 கோடி செலவு செய்யவில்லை. தந்தையின் நினைவிடத்தில் பல நூறு கோடி செலவு செய்து விழா எடுத்தார். பல இடங்களில் கட்டிடம் கட்டி, அவரது தந்தையின் திருவுருவ சிலையை வைத்து விழா எடுத்து வருகிறார். இப்படிதான் அரசு பணம், மக்களின் வரிப்பணம் விரயமாகிறது.

எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி அறிவித்துவிட்டார். விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக ஒருமித்த கருத்துள்ள கட்சியுடன் கூட்டணி என கூறிவிட்டு சென்றார். ஆனால், பாஜகவுடன் கூட்டு என ஊடங்கள் கூறி வருகிறது. இதையறிந்த கே.பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என மறுநாள் கடுமையாக பேசினார். இதனை பெரிதுப்படுத்தி சிறுபான்மை வாக்குகளை வாங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முயற்சி செய்கின்றனர்.

திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் தனது பொறுப்புக்கு ஏற்றவாறு தகுதியாக பேசவில்லை. ரெய்டு வந்தவுடன் பாஜகவுடன் கூட்டு என்று சொல்லிவிட்டார். மீண்டும் ரெய்டு வந்தால், பாஜகவுடன் கட்சியை இணைத்துவிடுவார் என பேசி உள்ளார். மேலும் 80 ஆண்டு காலம் உழைத்த தனது தாத்தாவின் பெயரை ஏன் வைக்கக்கூடாது என்கிறார். 80 ஆண்டு காலம் உழைத்த நீங்கள், அன்றாடங்காட்சியாக சென்னைக்கு வந்த மு.கருணாநிதி, எத்தனை ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறீர்கள். அவரது மகன், பேரன், மருமகள் முரசொலி மாறன் என குடும்பத்தின் சொத்து ஒன்றரை, இரண்டு லட்சம் கோடியாக இருக்கிறது. கட்சியையும், ஆட்சியையும் வைத்து கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளையை பற்றி உதயநிதி பேசவில்லை.

அதிமுக தலைவரை பற்றி பேசுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அறுகதை கிடையாது. சாதாரண நிலையில் இருந்து உழைத்து, தொண்டர்களுடன் இணைந்து செயலாற்றி பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளார். திமுகவில் மு.கருணாநிதி உழைத்தார். அவரது மகன் மு.க.ஸ்டாலின், பேரன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாரிசு என்பதால் பதவி வழங்கப்பட்டது. மு.கருணாநிதிக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் துரைமுருகன் இப்போது எந்த இடத்தில் இருக்கிறார்? உழைத்து பதவிக்கு வந்தவர் கே.பழனிசாமி. சென்னையில் ஒரு கருத்தும், டெல்லிக்கு சென்றால் ஒரு கருத்தும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். எனவே தமிழகத்தின் வரி வருவாயை மத்திய அரசு பகிர்ந்து கொடுக்கவில்லை என முதல்வரின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

நடிகர் விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அவரது ரசிகர்கள் தொண்டர்களாக மாற வேண்டும். மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நீண்ட தூரம் அவர், அரசியலில் பயணிக்க வேண்டும். அப்போதுதான், அரசியல் ரீதியாக தலைவர் என்ற அங்கீகாரத்தை பெற முடியும். மக்களையும், அரசியல் கட்சிகளையும் திசை திருப்பும் நோக்கத்தில் ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்லியிருக்கலாம்.

அதிமுக 53-வது ஆண்டில் பயணித்து வருகிறது. 2 கோடி தொண்டர்களை நம்பி, தேர்தல் களத்தில் கே.பழனிசாமி போட்டியிடுகிறார். திடீரென கருத்தை சொல்லிவிட முடியாது. அப்படியே சொல்ல வேண்டும் என்றால் கூடி பேசி முடிவெடுத்துதான் சொல்ல முடியும். நடிகராக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கட்சி, தற்போது எதிர் கட்சியாக உள்ளது. மீண்டும், ஆளுங்கட்சியாக வரும்” என்றார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *