“ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவன் தைரியத்தை பாராட்டுகிறேன்” – சீமான் | appreciate the courage of Thirumavalavan to ask for a share in the ruling power -Seaman

1310990.jpg
Spread the love

மதுரை: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தைப் பாராட்டுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரை மாவட்டம், சோழவந்தானில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (செப்.14) கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இதில் பங்கேற்க மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டார். அவர் நேரில் வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார். தொழில் நிறுவன அதிபருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மன்னிப்புக் கேட்ட வீடியோவை வெளியிட்டது தவறு என தெரிந்து அண்ணாமலை மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறேன்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்திரா காந்தி தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு பிறகு எந்த பிரதமரும் பதவிக்கு வரவில்லையா? இலங்கை தமிழர்களை கொல்ல இந்திய பிரதமர்கள் பல கோடிகளை வட்டியில்லாக் கடனாக கொட்டிக் கொடுத்து இருக்கின்றனர். பாஜக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி யில் உள்ளது. கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை. நம் காலடியிலுள்ள இலங்கை என்ற சிறு நாட்டிடம் இந்தியா கைகட்டி நிற்பது எவ்வளவு கேவலம்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, குஜராத், பிஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில மீனவர்கள் என்றால் மத்திய அரசு சும்மாவிடுமா? குஜராத், பிஹாரில் வெள்ளம் என்றால் ஒடோடிச் செல்லும் மத்திய அரசு, தமிழகத்தில் வெள்ளம் என்றால் எட்டிப் பார்ப்பதில்லையே. பகை நாடாக பாக்கிஸ்தான் இருந்தாலும், மீனவர்களை கைது மட்டுமே செய்கிறது. ஆனால் இலங்கை, 850 மீனவர்களை கொன்று குவித்துள்ளது. இந்தியாவின் மீது பயமின்றி இலங்கை மீனவர்களை கொல்கிறது. பல ஆண்டாக நடக்கும் நிகழ்வு என்பதற்காக சும்மா விட்டுவிட முடியுமா? கொஞ்சம் காத்திருங்கள். மீனவர்கள் பிரச்சினைக்கு முடிவுகட்டுகிறோம்.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் தொல். திருமாவளவனின் தைரியத்தைப் பாராட்டுகிறேன். 2021 சட்டமன்ற தேர்தலில் இதே முழக்கத்தை வைத்து திருமாவளவன் தேர்தலை சந்தித்து இருக்கலாமே? ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலைப்பாட்டில் திருமாவளவன் பின்வாங்காமல் இருக்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை அழைக்கவில்லை. எதிர்வரும் தேர்தலில் மது ஒழிப்புக்கு ஆதரவாக உள்ள கட்சிகளுடன் திருமாவளவன் அணி சேரவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என, திமுகவையும் சேர்த்துத்தான் திருமாவளவன் சொல்கிறார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு கூட்டணி ஆட்சியில் பங்கு கொடுத்தது போல திமுக, தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்குமா? கருணாநிதி குடும்பத்தில்தான் துணை முதல்வர்கள் இருப்பார்களா? நாட்டில் யாரும் துணை முதல்வர் ஆகக்கூடாதா? இவர்கள் வீட்டில் இருந்து தான் துணை முதல்வராக வருவார்களா? இதை எதிர்த்துத் தான் திருமாவளவன் கேள்வி கேட்கிறார். இனிவரும் காலங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்கவேண்டும்.

விஜய் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காமல் நாட்கள் நகர்த்தப்படுகிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநாட்டுக்கு அனுமதி பெற கால அவகாசம் வேண்டும். புதிதாக கட்சி தொடங்கும்போது, அதிகாரத்தில் உள்ளவர்கள் நெருக்கடி தருவது வாடிக்கையாக உள்ளது. விஜய் அரசியலுக்கு புதிது, நான் கட்சி தொடங்கியபோது, பல இன்னல்களைச் சந்தித்தேன். விஜய் தற்போது தான் கட்சி துவங்கிய உள்ளார். அவர் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழகத்தில் செயல்பட்ட பல நிறுவனங்கள் ஏன் தமிழகத்தை விட்டு வெளியேறியது? ரூ.7,000 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்கள் எங்கே முதலீடு செய்யப் போகின்றன? ஜெயலலிதா காலத்தில் இருந்தே முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. அப்புறம் ஏன் தமிழகம் வளர்ச்சியடையவில்லை? 31 லட்சம் அல்ல 3,000 பேருக்கு வேலை கொடுத்ததை நிரூபிக்க முடியுமா?” என்று சிமான் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *