ஆணவப் படுகொலையை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Commission headed by retired judge K.N. Basha to prevent honour killings – CM announces

1380088
Spread the love

சென்னை: சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஆணவப் படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: நேற்றைய விவாதத்தில் உறுப்பினர்கள் சிலர் ஆணவப் படுகொலை குறித்து தெரிவித்த சில கருத்துக்களுக்கு நான் இப்பேரவை வாயிலாக பதிலளிக்க விரும்புகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அறநெறியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண் இந்த தமிழ் மண்.

சாதி இரண்டொழிய வேறில்லை. இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்கிறார் அவ்வையார். இதுதான் தமிழ்தம் நெறி, தமிழர் போற்றி வந்த பண்பாடு.

இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது, சாதி வேற்றுமையாக மாற்றப்பட்டது, உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டது, மேல் கீழ் என்ற வேற்றுமை விதைக்கப்பட்டது. வேற்றுமை விதைக்கப்பட்ட உடனேயே, ஒற்றுமைக்கான குரல்களும் தமிழ் மண்ணில் உரக்க ஒலித்ததைக் காண்கிறோம்.

பல சீர்திருத்தக் கருத்துக்கள் இயக்கமாகவே உருவெடுத்துள்ளன. அயோத்திதாச பண்டிதர், பெரியார், திருவிக, பாரதிதாசன், அண்ணா ஆகியோர் இந்த சீர்திருத்தக் கருத்துக்களை இந்த தமிழ் மண்ணில் விதைத்தார்கள்.

கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதிவிகள், அனைவருக்கும் சம அதிகாரம், சம வாய்ப்பு ஆகியவற்றை பெறுவதின் மூலம் யாவரும் ஒருவரே என்பதை உருவாக்கவே இந்த இயக்கங்கள் போராடின, வாதாடின, மன மாற்றங்களைச் செய்தன.

சாதிக்கு மதத்துக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு, இனத்துக்கு தரும் சிந்தனையை திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கங்கள் விதைத்தன. இனமும் மொழியும் நமது அடையாளங்களாக மாற்றியது இதன் சாதனைகள். சீர்திருத்தக் கருத்துக்களை பரப்புரை செய்துவந்த அதே காலகட்டத்தில் அதற்கான சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டு வந்து சமூக சீர்திருத்த ஆட்சியை கருணாநிதி நடத்தினார்.

அந்த வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் நெஞ்சு நிமிர்த்தி நடத்தி வருகிறோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியிருக்கிறோம், பெரியார் பிறந்த நாளிலும் அம்பேத்கர் பிறந்த நாளிலும் இந்த நாடே உறுதிமொழி எடுக்கிறது.

இவர்கள் பிறந்த நாளில் அனைவரும் சமூக நீதி, சம நீதி உறுதிமொழி எடுப்பது சாமானியமான சாதனை அல்ல. தமிழ்நாடு சட்டப்பேரவை இதே அவையில் 29.04.2025 அன்று உரையாற்றியபோது ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமையின் குறியீடாகவும் வகைச் சொல்லாகவும் இருக்கக்கூடிய காலணி என்ற சொல்லை நீக்குவோம் என நான் அறிவித்தேன்.

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக அவற்றை சமூக நீதி விடுதிகளாக பெயர் மாற்றி இருக்கிறோம்.

பிரதமர் மோடியை சமீபத்தில் சந்தித்து முக்கியமான ஒரு கோரிக்கையை நான் வைத்தேன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதி பெயரில் இறுதி எழுத்தில் முடிவடையும் ன் என்பதற்குப் பதில் ர் என விகுதி மாற்றம் செய்து அந்த சமூக மக்களுக்கு உரிய மரியாதை செய்யும் வண்ணம் ஒன்றிய அரசு உரிய சட்டம் இயற்ற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.

சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடமை, பொது உரிமை, கல்வி உரிமை, அதிகார உரிமை ஆகிய கொள்கைகள்தான் வேற்றுமையை பகைமையை விரட்டும். அதனைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். இதன்மூலமாகத்தான் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.

இத்தகைய சூழலில் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் நமது மனதை வேதனை அடைய வைத்துள்ளன. இதற்காகவா நமது தலைவர்கள் போராடினார்கள்? நாம் போராடி வருகிறோம் என்ற வேதனை ஏற்படுகிறது.

உலகம் அறிவுமயமாகி வருகிறது. ஆனால், அன்புமயமாவதை அது தடுக்கிறது என்பதுதான் இந்த சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களை வாட்டி வருகிறது. உலகம் முழுவதும் பரவி அறிவினால் மதிக்கப்பட்டு வரும் நம் தமிழ் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டுக் கொள்வது என்ன நியாயம் என்பதுதான் நம்மை வருத்தும் கேள்வியாக உள்ளது.

எதற்காகவும் ஒருவரை மற்றொருவர் கொல்வதை நாகரீக சமுதாயத்தால் ஏற்க முடியாது. கொல்வதை மட்டுமல்ல, பகைப்பதை, சண்டை போட்டுக்கொள்வதை, அவமானப்படுவதை என எதையும் பண்பட்ட வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துவிடும் ஒரு துயரமான சம்பவம் நம் நெஞ்சை உலுக்கிவிடுகிறது. நம் சமுதாயத்தையே தலைகுனிய செய்து விடுகிறது.

பெண்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை பறிக்கும் ஆணாதிக்கமும் இந்த குற்றச் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த வேதனையைத்தான் நமது உறுப்பினர்கள் பலரும் வெளிப்படுத்திக் காட்டி இருக்கிறீர்கள். ஆணவப்படுகொலையை தடுக்க வேண்டும், எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்.

சமீபத்தில் செங்கல்பட்டில் நடைபெற்ற திராவிடர் கழக சுயமரியாதை மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, தீர்மானமாக நிறைவேற்றி என்னிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் இந்த அநீதியை தடுக்க வேண்டும் என்பது நம் அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.

ஆணவப் படுகொலைகள் நடக்கும்போது அது தொடர்பான வழக்குகளில் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படுகொலைகளுக்கு சாதி மட்டுமே காரணம் அல்ல. இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன.

எதன்பொருட்டு நடந்தாலும் கொலை கொலைதான். அதற்கான தண்டனைகள் கடுமையாக தரப்பட்ட வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறாரகள். யாரும் எவரும் எதன்பொருட்டும் செய்த குற்றத்தில் இருந்து தண்டனையில்லாமல் தப்பிவிடக்கூடாது என்பதை காவல்துறைக்கு உத்தரவாக போட்டுள்ளோம். எனவே, சட்டம் தனது கடமையை செய்கிறது.

அதேநேரத்தில் இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வை சமூக சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல அரசியல் இயக்கங்களும் பொதுநல அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.

நாகரிக சமூகத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, சமூக சிந்தனையில் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும். சமூதாயத்தில் சாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும்.

மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் ஏதும் இல்லை. அனைவரும் சமம். பாலின சமத்துவமும் வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்துக்கு அடையாளம் என்றார் பெரியார்.

அனைத்து விதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும் சமத்துவ சிந்தனையும் கொண்ட சுயமரியாதையையும் அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.

சீர்திருத்தப் பரப்புரையும் குற்றத்துக்கான தண்டனையும் வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இது குறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என் பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்பதை என்னுடைய முக்கியமான அறிவிப்பாக இந்த மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.

இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் தமிழக அரசு ஆணவப் படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளித்து அமைகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *