முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்துப் பேசிய அவர், “எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று வதந்திகள் பரவின. அதையெல்லாம் முறியடித்து எம்ஜிஆரைப் படுக்கவைத்துக் கொண்டே வெற்றி பெற வைத்தவர்கள் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள்.
அப்படிப்பட்ட ஊரில் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைப்படுகிறேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் சேர்ந்துள்ளோம் என வதந்தியைப் பரப்புகின்றனர்.
ஊடகங்கள் வதந்திகளை நம்பி சில செய்திகளை வெளியிடுவது வருத்தமளிக்கிறது.

யாரோ கிளப்புகின்ற வதந்திகளை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம். கூட்டணி குறித்தும் இன்னும் அறிவிக்காதபோது கூட்டணி குறித்து வரும் வதந்திகளை தகவல் என்று செய்தியாக்குவது எங்களுடைய தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தக் கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நாங்கள்தான்; ஊடகங்கள் அல்ல. முக்கிய கட்சிகள் எங்களைக் கூட்டணிக்கு அழைத்து வருகின்றனர்.
தமிழக மக்களுக்கும், எங்களுக்கும் எது சிறந்ததோ அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்போம்.