ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் Ball பட்டால் என்ன செய்ய வேண்டும்? காமத்துக்கு மரியாதை 267

Spread the love

”ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்” என்கிற சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அந்த விஷயங்களை இங்கே விவரிக்கிறார்.

'அசூஸ்பெர்மியா'
‘அசூஸ்பெர்மியா’

”ஓர் ஆண் குழந்தை கருவில் இருக்கையில், விந்துப்பை அதன் வயிற்றில் உருவாகி, பிறக்கும்போது கீழிறிங்கி அதனிடத்தில் இருக்க வேண்டும். அப்படி வெளியே வராமல், வயிற்றுக்குள்ளேயே இருந்தாலோ அல்லது கீழிறிங்கி வரும் பாதையிலே நின்றுவிட்டாலோ விந்துப்பையும் வளராது; விந்தணுக்கள் உற்பத்தியும் ஆகாது. மருத்துவமனையில் குழந்தைப் பெற்றுக்கொண்டால், அங்கே இருக்கிற குழந்தை நல மருத்துவர், இதை பரிசோதித்துப் பார்த்துவிடுவார். ஒருவேளை பிரச்னையிருந்தால், அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், அக்குழந்தை வளர்ந்த பிறகு ‘அசூஸ்பெர்மியா’ (Azoospermia) என்கிற விந்தணுக்களே இல்லாத பிரச்னை வரும். கவனம், இந்தப் பிரச்னை இந்தியாவில் 2 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டிய முதல் விஷயம் இது.

இரண்டாவது விஷயம், புட்டாலம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற அம்மை நோய் வந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். இந்த அம்மைக்குக் காரணமான கிருமிகள், விந்துப்பையைத் தாக்கி, விந்தணுக்களை உற்பத்தி செய்கிற செல்களை ஒன்றுமே இல்லாமல் செய்துவிடும். இதை வராமல் தடுக்கிற எம்.எம்.ஆர் தடுப்பூசியை அட்டவணைப்படி போட வேண்டும். ஒருவேளை அம்மை வந்துவிட்டால், கை வைத்தியம் பார்க்காமல் மருத்துவரை நாட வேண்டும்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

மூன்றாவது விஷயம், பிறப்புறுப்பில் அடிபடுவது. ஆண் பிள்ளைகள் கிரிக்கெட், ஃபுட் பால் என்று விளையாடும்போது, ஆணுறுப்பில் கவசம் அணிந்து விளையாட வேண்டும். பால் வேகமாக பட்டுவிட்டால், விந்துப்பைகள் வீங்கி விடும். சில நேரம் அது அப்படியே மெள்ள மெள்ள மறைந்தும் போகலாம். அதாவது, உடம்புக்குள்ளேயே அது இழுக்கப்பட்டு விடும்.

ஆண் குழந்தைகள் மரத்தில் இருந்து குதிப்பது, தாவுவது அல்லது உயரத்தில் இருந்து விழும்போது, விந்துப்பைகளில் அடிபட்டு விடும். சில நேரம், தொங்கிக்கொண்டிருக்கிற விந்துப்பைகள் திருகப்பட்டு விடும். இதனால், விந்துப்பைக்கு போகின்ற ரத்த நாளங்கள் அடைப்பட்டு விடும். இது எமர்ஜென்சி நிலை. 3 அல்லது 4 மணி நேரத்துக்குள் இதை சரி செய்துவிட்டால், பின்னாளில் ‘அசூஸ்பெர்மியா’ (Azoospermia) என்கிற விந்தணுக்களே இல்லாத நிலையைத் தவிர்த்துவிடலாம். நேரம் கடந்துவிட்டால், ரத்த ஓட்டம் நின்று, ஆணுறுப்பு உயிரில்லாத உறுப்பாகி விடும். அதை அறுவை செய்து எடுக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை.

மேலே சொன்ன பிரச்னைகள் வராமல் தடுக்கவும் வழியிருக்கிறது; வந்தப்பிறகும் தீர்விருக்கிறது. ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் டாக்டர் காமராஜ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *