ஆதரவற்றோர் ‘வாழ்விடம்’ ஆன ஓசூர் பேருந்து நிலையம் – முதியோரை மீட்டு காப்பகத்தில் சேர்க்க கோரிக்கை | Hosur bus stand turned into a home for the destitute

1285061.jpg
Spread the love

ஓசூர்: ஆதரவற்றோருக்கு வாழ்விடமாக ஓசூர் பேருந்து நிலையம் மாறியுள்ளது. கைவிடப்பட்டோர் மற்றும் முதியோர்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில் நகரமான ஓசூரில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வாடகை வீடுகள் எடுத்துத் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதனால், ஓசூர் பேருந்து நிலையம் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் வருகையால் 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும்.

பார்க்கப் பரிதாபம்: இந்நிலையில், உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் உடுத்த உடையின்றியும், உணவின்றியும், பரட்டை தலையும், கிழிந்த ஆடைகளுடன், பார்க்கவே பரிதாபமான நிலையில் ஓசூர் பேருந்து நிலையத்தில் இரவு, பகலாகத் தங்கி வருகின்றனர். இதுபோன்ற ஆதரவற்ற முதியவர்களை மீட்டு, அரசு மற்றும் தொண்டு நிறுவன காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்டோர்: இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஓசூர் நகரில் பன்மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் நகரில் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றனர்.

இதேபோல, ஓசூர் பேருந்து நிலையத்திலும் ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள் படுத்து உறங்கி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

பசியும், பட்டினியுமாய்: ஒரு சில முதியவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டும், உடலில் காயங்களுடன் மருத்துவச் சிகிச்சையின்றி பசியும், பட்டினியுமாகப் படுத்த படுக்கையாக இருந்து வருகின்றனர். முதியவர்கள் யாசகம் பெற்று சேமித்து வைத்துள்ள பணத்தை இரவு நேரங்களில் சில மர்ம நபர்கள் பறித்துச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

எனவே, ஆதரவற்ற, உறவினர்களால் கைவிடப்பட்டவர்களை மீட்டு, மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் தொண்டு நிறுவன காப்பகங்களில் சேர்த்து, தேவையானவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி, அவர்களின் விருப்பத்தை அறிந்து அவர்களின் உறவினர்கள் இருப்பின் அவர்களிடம் சேர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி சார்பில் இரு இல்லங்கள்: ஓசூர் மாநகர நல அலுவலர் பிரபாகரன் கூறியதாவது: ஓசூர் மாநகராட்சி சார்பில், இரு இடங்களில் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இந்த இல்லம் தனியார் அமைப்பு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்றோர் சுமார் 60 பேர் தங்க வைக்கப்பட்டு, 3 வேலையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இல்லத்தில் உள்ள சிலர் காலையில் வெளியே சென்றுவிட்டு, இரவு இல்லத்தில் தங்கி வருகின்றனர். வீட்டில் கோபித்துக் கொண்டு வந்தவர்களை, அவர்களின் உறவினர்களிடம் பேசி, வீட்டில் ஒப்படைத்துள்ளோம். இங்குள்ளவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

ஆதரவற்றோர் இல்லம் தொடர்பாகத் தெரியாமல் பேருந்து நிலையங்களில் தங்கியுள்ள முதியவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால், அவர்களை மீட்டு, இல்லத்தில் தங்க வைத்துப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *