சென்னையில் கடந்த வாரம் தவெக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர நினைத்தவர் நடிகர் ரஜினிகாந்த்.
சிஸ்டம் சரியில்லை, அனைத்தையும் மாற்ற வேண்டும் என அவர் அரசியலுக்கு வர நினைத்தபோது, திமுக குடும்பம் அவரை மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தனர்” எனப் பேசியிருந்தார். அவருடைய இந்தப் பேச்சு சர்ச்சையானது.
’காக்கா குஞ்சுகளுக்கும் கள்ளச் சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் தலைவா.. வேதனை! வெட்கம்! அவமானம்! காலம் பேசாது.. நிச்சயம் பதில் சொல்லும்; களத்தில் சந்திப்போம்.. கதம்! கதம்!” என்ற வாசகங்களோடு ரஜினிகாந்தை அவதூறாகப் பேசிய ஆதவ் அர்ஜுனாவைக் கண்டித்து மதுரையில் மதுரை மாநகர் மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நேற்று கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
தொடர்ந்து ரஜினி காந்த்தின் நண்பர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி குமரவேல் தலைமையில் நடிகர் ரஜினி காந்த் ரசிகர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “1996 ஆம் ஆண்டு ஏழு நிமிட பேட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி 40 சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்ற செய்தது ரஜினி வாய்ஸ். அப்போதைய ஆட்சி அமைவதற்குக் காரணமாக இருந்தவரும் ரஜினி.

புகழின் உச்சத்தைப் பார்த்தவருக்கு அச்சம் கிடையாது. அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம். புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் ரஜினியைச் சீண்டி பார்க்க வேண்டாம்.