சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜூனா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அதை விமர்சிக்கும் வகையில் தவெக-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா, தனது சமூக வலைதளப்பக்கத்தில் இலங்கை, நேபாளம் போல தமிழகத்திலும் புரட்சி உருவாகும் என்ற வகையில் பதிவிட்டு இருந்தார். பின்னர் அந்தப்பதிவை 34 நிமிடங்கள் கழித்து அவரே அழித்து வி்ட்டார்.
இதுதொடர்பாக பொது அமைதி மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளதாகக் கூறி ஆதவ் அர்ஜூனா மீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதவ் அர்ஜூனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று நடந்தது.
அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆகியோர் வாதிடும்போது, ‘‘இலங்கை மற்றும் நேபாளத்தில் புரட்சி வெடித்தது போல தமிழகத்திலும் ஆட்சியைக் கவிழ்க்கபுரட்சி ஏற்படும் என்பதுபோல வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் தான் தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எந்தச் சூழலில் எப்படிப்பட்ட கருத்துகளை யார் பதிவிடுகின்றனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. கரூரில் பெரிய சோகமான நிகழ்வு அரங்கேறிய நிலையில் இப்படியொரு கருத்துகளை தனது வலைதளப்பக்கம் மூலமாக பதிவிட்டு அமைதிக்கு பங்கம் விளைவிக்க நினைத்ததால் அதை தடுக்கும் நோக்கிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புகாரில் சந்தேகம் இருந்தால் மட்டுமே ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி அதன்பிறகு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
அந்தப் புகாரில் முகாந்திரம் இருந்தால் நேரடியாக வழக்குப்பதிவு செய்வதில் எந்த தவறும் இல்லை. வெறுப்பு பேச்சு தொடர்பாக போலீஸாரே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யலாம் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித் துள்ளது.
வன்மத்தைக் கக்கும் நோக்கில் சமூக வலைதளத் தில் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பதிவிட்டு விட்டு பின்னர் அதை 34 நிமிடங்கள் கழித்து அவரே அழித்து விட்டார் என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கே்ார முடியாது.
மனுதாரரின் பதிவை லட்சம் பேர் பார்த்துள்ளனர். எனவே அவர் மீதான வழக்கை சட்டப்பூர்வமாக சந்திக்கட்டும். இதற்கு உள்நோக்கம் உள்ளதாக அர்த்தம் கற்பிக்கக்கூடாது’’ என வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட ஆதவ் அர்ஜூனா தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘மனுதாரர் பதிவிட்ட கருத்து வெறுப்பு பேச்சு என்ற வரம்புக்குள் வராது. கோபத்தின் வெளிப்பாடு தான் அந்த பதிவு. 18 மணி நேரம் கழித்தே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் எந்த வன்முறை சம்பவங்களும் நடைபெறவில்லை. அந்தப்பதிவின் இறுதியில் பாரதியார் கவிதையையும் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சையில் சிக்கக்கூடாது என்பதால்தான் பதிவை அவரே அழித்துள்ளார்.
இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.