யமுனையில் விஷம் கலந்தது தொடர்பான ஆதாரத்தை அளிக்குமாறு அரவிந்த் கேஜரிவாலிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தலைநகரான தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிப்.5-ல் நடைபெறும் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றனர்.
இந்த நிலையில் பாஜக தலைமையிலான ஹரியாணா அரசு தில்லிக்கு யமுனை நீரில் விஷம் கலந்ததாக கூறியதற்கு உண்மையான ஆதாரம் அளிக்குமாறு ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதில், கேஜரிவாலுக்கு அனுப்பிய நோட்டீசில், புதன்கிழமை இரவு 8 மணிக்குள் அவரது கோரிக்கைக்கு உண்மை ஆதாரத்தை அளிக்குமாறு தேர்தல் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தொடர்புடைய சட்ட விதிகளின் படி இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தால் விசாரிக்கப்படுகிறது. எனவே, புகார்களுக்கான உங்கள் பதிலை வருகிற ஜனவரி 29 ஆம் தேதி இரவு 8 மணிக்குள் உரிய ஆதாரத்துடன் அனுப்ப வேண்டும். இது விஷயத்தை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.