ஆதார் அட்டை  இருந்தால் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதி: காவல்துறை சொன்ன புது அப்டேட்  – Kumudam

Spread the love

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ள நிலையில், கடந்த 19 நாட்களாக மலைக்குச் செல்ல மறுக்கப்பட்டிருந்த அனுமதி, இன்று (டிசம்பர் 22) முதல் அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சந்தனக்கூடு விழா மற்றும் கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற ஜனவரி 6-ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று (டிசம்பர் 21) இரவு 8.30 மணியளவில் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின்னொளியுடன் கூடிய அலங்கார வண்டியில் பிறை கொடி எடுத்து வைக்கப்பட்டது. 

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அந்தக் கொடி, பெரிய ரதவீதி, கோட்டைத் தெரு வழியாக மலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தர்காவில் அமைக்கப்பட்ட கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

அனைவருக்கும் அனுமதி வழங்கிய காவல்துறை

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த 19 நாட்களாகப் பொதுமக்களுக்கு மலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

மலையில் உள்ள தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிற்பகல் 12.30 மணி முதல் அனைத்துத் தரப்பினருக்கும் மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துத் தெரிவித்த காவல் உதவி ஆணையர் சசிபிரியா, பொதுமக்கள் அனைவரும் ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணைக் கொடுத்துவிட்டுத் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லலாம் என்று அறிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *