புது தில்லி: ஆதார் விவரங்களை சமீபத்திய தகவல்களுடன் இணைய வழியில் கட்டணமின்றி புதுப்பிக்க ஏதுவாக மத்திய அரசு வழங்கியுள்ள அவகாசம் செப்.14-ஆம் தேதி நிறைவடைகிறது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஆதார் பதிவு விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் கட்டணமின்றி புதுப்பிக்க கடந்த ஜூன் மாதம் வரை வழங்கிய அவகாசத்தை செப்.14-ஆம் தேதி வரை ஆதார் ஆணையம் நீட்டித்திருந்தது. தற்போது அந்த அவகாசம் தொடர்பான நினைவூட்டலை ஆதார் ஆணையம் வழங்கியுள்ளது.
ஆதார் எண் மற்றும் அட்டை பெறுவதற்காகப் பதிவு செய்யப்படும் விவரங்களில் மோசடியைத் தவிர்க்கவும் ஒழுங்குமுறைப்படுத்தவும் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை விதிகளை ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் எண் அல்லது அட்டை வைத்திருப்போர் தனது பெயர் திருத்தம், தந்தை அல்லது கணவர் அல்லது பராமரிப்பாளர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கைப்பேசி எண், பிறந்த தேதி, முகவரி போன்றவற்றின் சமீபத்திய தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.
இந்தப் புதுப்பிப்பு செயல்முறைக்கு ஆதாரமாக புதிய தகவல்கள் இடம்பெற்ற வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் ஆவணத்துடன் வசிப்பிடத்துக்கு அருகே உள்ள அரசு சேவை மையத்தை அணுகலாம் என்று ஆதார் ஆணையம் அதன் இணையதளத்தில் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த அசல் ஆவணத்தை பதிவேற்றி https://myadhaar.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகளாகியிருந்தால், தங்களுடைய விவரங்களை புதுப்பித்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 முதல் 15 வயது வரை உள்ளவர்கள் ஆதார் வைத்திருந்தால் அவர்கள் தங்களுடைய பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில் செப்.14-ஆம் தேதிவரை தகவல்களை ஆதார் இணையதளத்தில் வழியாக புதுப்பித்துக் கொள்ள கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. சேவை மையங்களுக்குச் சென்று விவரங்களை புதுப்பிக்க வேண்டுமானால், ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கு முன்னதாக, ஆதார் விவரங்களை புதுப்பிக்க கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி, நிகழாண்டு மார்ச் 15, ஜூன் 14 ஆகிய நாள்கள் வரை ஆதார் ஆணையம் அவகாசம் வழங்கியிருந்தது. அந்த வரிசையில் ஆதார் விவர புதுப்பிப்புக்கான அவகாசம் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.