தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அக்கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 1-ம் தேதி விமர்சையாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பழங்காலக் கல் நாதஸ்வரம் இரண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கல் நாதஸ்வரம் பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பட்டு வருகிறது. மற்றொன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

இந்நிலையில், குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயிலில் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமிநாதனின் தம்பி மகன் தமிழழரசன் கல் நாதஸ்வரத்தில் இசைத்தார்.
இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அத்துடன், கல் நாதஸ்வரம் இசைத்ததை அனைவரும் ஆச்சரியத்துடன் மெய்மறந்து கேட்டனர். பழங்கால கல் நாதஸ்வரம் குறித்து வியப்புடன் பேசிக்கொண்டனர்.
இது குறித்து கோயில் தரப்பில் பேசினோம், “இங்குள்ள கல் நாதஸ்வரம் பல நூற்றாண்டுகள் பழமையானது. வரலாற்றுப் பொக்கிஷமான கல் நாதஸ்வரம் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடைகொண்டதாக இருக்கும். ஆனால் கல் நாதஸ்வரம் ஆறு மடங்கு பெரியது. அதாவது சுமார் 3 கிலோ 600 கிராம் எடையும் இரண்டரை அடி நீளமும் கொண்டது. இந்த நாதஸ்வரத்தில் 2 இன்ச் உயரமுள்ள திமிரி சீவாளி உள்ளது.

வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தை கொண்டது. கல் நாதஸ்வரத்தின் உளவுப் பகுதி மூன்று உறுதியான தனித்தனி பாகங்களாக செய்யப்பட்டு, வெண்கலப் பூண்டு மூலம் இணைக்கப்பட்டவை.
மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் ஏழு ஸ்வரங்கள் இருக்கும். கல் நாதஸ்வரத்தில் ஆறு ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். எனவே சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதிமத்தியம ராகங்களை மட்டுமே வாசிக்க முடியும். சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்தமத்தியம ராகங்களை இந்த நாதஸ்வரத்தில் வாசிக்க முடியாது.
மறைந்த நாதஸ்வர மேதை மன்னார்குடி பக்கிரியா பிள்ளை 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்தார். பிறகு, கோவில் நாதஸ்வர வித்வான் குஞ்சுதபாதம் பிள்ளை 30 ஆண்டுகளுக்கு மேல் இதனை வாசித்தார்.
அதன்பிறகு சுவாமிநாதன் கல் நாதஸ்வரத்தை வாசித்தார். இறுதியாக, கடந்த 2017 ஆம் ஆண்டு செப். 30 ஆம் தேதி, சுவாமிநாதன் ஒரு மணி நேரத்திற்கு நான்கு கீர்த்தனைகளை கல் நாதஸ்வரத்தில் இசைத்தார்.” என்றனர்.

ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
இதில் சுவாமிநாதனின் தம்பி மகன் தமிழரசன் சுமார் 26 நிமிடங்கள் அமிர்தவர்ஷிணி, அம்சநாதம், சாரங்க, சரஸ்வதி ஆகிய நான்கு ராகங்களை கல் நாதஸ்வரத்தில் இசைத்தார். பின்னர் தமிழரசன் கோயில் செயல் அலுவலர் முருகனிடம் கல் நாதஸ்வரத்தை ஒப்படைத்தார்.
இதையடுத்து அது பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. கும்பகோணத்தில் சிறப்புகளில் ஒன்றான கல் நாதஸ்வரம் வாசிக்கப்பட்டதை பலர் கலந்து கொண்டு பார்த்து கேட்டு ரசித்தனர்.