‘இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம், இன்னொரு மொழிப்போருக்கு தயாராக உள்ளோம்’ என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,.
இதுகுறித்து கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியை நம் மீது திணித்துக் கொண்டே இருக்கின்றனர். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை போராட்டம் தொடரும். அப்போதும் இப்போதும் நம்மை எதிர்க்கும் ஒரு சிறு ‘விபீடணக்’ கூட்டத்தை எதிர்கொண்டுதான் வருகிறோம். அந்த விஷமக் கூட்டம் நம்மை நோக்கி கேட்கும் முதல் கேள்வி, ‘இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எல்லாம் இந்தியை ஏற்றுள்ளபோது தமிழகம் மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?’ என்பதுதான்.
இந்தியா குடியரசு நாடாக ஆனபோது, கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு மாநிலமும் தனக்கான மொழிக் கொள்கையை வகுத்துக் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இந்தியா விடுதலையடையும் முன்பே, தனக்கான மொழிக்கொள்கையை கொண்டிருந்தது இன்றைய தமிழகமான அன்றைய சென்னை மாகாணம். அதற்கு அடிப்படைக் காரணம், திராவிட இயக்கத்தின் மொழியுணர்வும் இனப்பற்றும்தான்.
தாய்மொழியை அடிப்படையாகவும், ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகவும் கொண்டு அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையைத் தமிழகம் கடைப்பிடித்து வருவதால்தான் இந்த வளர்ச்சியை தமிழகம் பெற்றுள்ளது. தமிழ்மொழி தன் சீரிளமைத் திறம் குறையாமல் செழித்து வளர்ந்திருப்பதற்குக் காரணம், ஆதிக்க மொழியை என்றென்றும் எதிர்த்து நிற்கும் தமிழர்களின் போராட்டக் குணம்தான்.
நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதேநேரம், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை. மொழிக்கொள்கையில் தமிழகம் வகுத்துள்ள பாதை, நிலைப்பாடுமே சரி என்பதை இந்தியாவின் பல மாநிலங்களும் உணர்ந்து வருவதுடன், அதை உரக்க வெளிப்படுத்தும் காலமாகவும் இது அமைந்துள்ளது.
பிற மாநிலங்கள் பெற்றுவரும் இந்த விழிப்புணர்வுக்குத் தமிழகம்தான் காரணம் என்பதால்தான், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்’ கீழ் தமிழகத்துக்குரிய நிதியைத் தர மத்திய பாஜக.அரசு மறுக்கிறது.
தமிழகத்தை வஞ்சிப்பதையே பாஜக தன் கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளோ தமிழுக்குத் துரோகம் செய்யும் இந்தி – சமஸ்கிருதச் சேவகர்களாக இருக்கின்றனர். இந்த மண்ணில் இடக்கினைச் செய்ய நினைக்கும் எதிரியாக ஆரியமோ, ஆதிக்க இந்தியோ – சமஸ்கிருதமோ எதுவாக இருந்தாலும், எத்தனை கோடியை மத்திய அரசு கொட்டிக் கொடுத்தாலும் அவற்றை ஏற்க மாட்டோம்.
மொழிப்போர்க் களத்தில் முதல் பலியான மாவீரர்கள் நடராசன், தாளமுத்து எனத் தொடங்கி, 1965 மொழிப்போர் களத்தில் கீழப்பழுவூர் சின்னசாமி, சிவகங்கை ராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற உயிர்த்தியாகங்களால் ஆதிக்க இந்தியிடமிருந்து தாய்மொழியாம் தமிழைக் காத்த வரலாறு, திராவிட இயக்கத்துக்கும் அதன் அரசியல் பேரியக்கமான திமுகவுக்கும் உண்டு.
ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் திமுகவினரின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது. தமிழர்களிடம் வரியைப் பெற்று, தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சித்துவரும் போக்கை, தமிழக பள்ளி மாணவர்களும் உணர்ந்துள்ளனர்.
இளம் வயதினர் முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவர்களின் தாய்மொழிப் பற்றும் இன உணர்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. தமிழ்காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனான நான் என்றும் முன் நிற்பேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.