ஆத்தூர் தொகுதியில் 7227 வாக்காளர்கள் நீக்கம்? – அமைச்சர் ஐ.பெரியசாமி புகார்

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அப்போது, ” நேற்று காலை முதலே ஆத்தூர் வட்டாட்சியர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரடியாகச் சென்று வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை வற்புறுத்தி, “இனி சேரும் வாக்குகளை இடம்பெயர்ந்து விட்டார்கள்  (Shifted) என்று போடுங்கள்” எனச் சொல்லி சிறப்புச் சேர்க்கைப் பணியை இரவோடு இரவாக முடிந்து விட்டனர்.

புதிதாக சேர வருபவர்களையும் இடம் பெயர்ந்து விட்டார்கள் என்று பதிவு செய்ய மறுக்கிறார்கள். ஆத்தூர் தொகுதியில் மொத்தம் 21,800 முதல் 22,000 வாக்குகள் வரை இதுபோன்று பதிவு செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சின்னாளபட்டியில் 17,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது நடைபெற்ற சிறப்புச் சேர்க்கையில் 16,800 வாக்குகளே சேர்க்கப்பட்டுள்ளது.  ஒட்டுப்பட்டியில் இருந்தும் சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சின்னாளபட்டி பகுதியில் பலர் வியாபாரத்திற்காக வெளியூர்களுக்குச் சென்று வருவார்கள். சேர்க்கைக்கான கடைசி நாள் வரை பொறுமையாக இருந்து சேர்க்கை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சேர்க்கைப் பணிகள் நிறுத்தப்பட்டதால், இன்று வந்த பலரும் வாக்காளராகச் சேர முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

SIR

சின்னாளபட்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சேர்க்கைப் பணியின்போது, ஏறக்குறைய 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சுமார் 26 வாக்குச்சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றிருக்கிறது.  

இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர். வாக்காளர் பட்டியலில் பெரிய தவறு நடந்துள்ளதற்கு , மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்தார்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்

அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அளித்த விளக்கத்தில், “ஆத்தூர் தொகுதியை பொருத்தவரையில் இரண்டு, மூன்று குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் 11ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர். எனவே, தங்களது பதிவு விடுபட்டவர்கள் மீண்டும் 11ஆம் தேதி வரை வந்து தங்களை பதிவு செய்துகொள்ளலாம். அனைத்து கட்சியினர் பல்வேறு குறைகளை தெரிவித்துள்ளனர், அதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்

இது குறித்து ஆத்தூர் வட்டாட்சியர் முத்து முருகன் அளித்த விளக்கத்தில், “ஆத்தூர் தொகுதி முழுவதும் தொடர்ந்து எஸ்ஐஆர் படிவம் வாங்கப்பட்டு வருகிறது.  இதில் எந்த ஒரு குளறுபடியும் நடைபெறவில்லை. குறிப்பாக வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு உதவும் வகையில் கடந்த இரண்டு வாரங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்யவும் அதனை பெற்றுக் கொள்ளவும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. சரியான முறையில் எஸ்ஐஆர் நடைபெற்று வருகிறது.  ஒருவேளை விடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் சேர்ப்பதற்கான கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *