மதுரை: “நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் அவர் ஜெயிக்க முடியும். இல்லையென்றால் ஆந்திராவில் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவருக்கு ஏற்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களை மட்டுமல்ல தவெக-வையும் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கரூர் நெரிசல் சம்பவத்துக்கு முன்வரை விஜய் அதிமுகவையும், அதிமுக, விஜய்யையும் விமர்சித்து வந்தனர். தற்போது தவெக கட்சிக்கு பரிந்து அதிமுக பேசி வருகிறது. தவெக கொடிகள், அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சாரக் கூட்டத்தில் தென்படவே, கூட்டணி பிள்ளையார் சூழிபோட்டாச்சு என்று கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.
அதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அதிமுககாரங்களே தவெக கொடியை பறக்கவிட்டனர் என்று விமர்சனம் செய்தார். செல்லூர் கே.ராஜூ, “எங்க ஆட்சகள் எங்க கொடியையே பிடிக்க மாட்டார்கள், அவர்கள் எப்படி அடுத்த கட்சி கொடியை பிடிப்பார்கள்.” என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், அதிமுக எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்பி.உதயகுமார் ஒருபடி மேலே போய், “திமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டாவனால் கூட தவெகவை காப்பாற்ற முடியாது.” என்று கூறியுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் எதற்கெடுத்தாலும் ரோடு ஷோ நடத்துகிறார். தற்போது வடகிழக்கு பருவமழையில் சாலையில் எல்லாம் குண்டும், குழியாக காட்சி அளிக்கின்றன. மக்கள் தத்தளிக்கிறார்கள். முதல்வர் ரோடு ஷோ நடத்தி நிலைமையை கண்டு அறிய முன்வருவாரா?
ஆளும்கட்சி என்கிறார்கள். உட்கட்சி பூசலில் மதுரை மாநகராட்சியில் ஒரு மேயரை கூட அவர்களால் நியமிக்க முடியவில்லை. 75 ஆண்டுகள் கொண்ட மாபெரும் கட்சி திமுக. ஆனால் இன்றைக்கு 4 மாமன்ற உறுப்பினர் கொண்ட கம்யூனிஸ்ட் சேர்ந்த துணைமேயருக்கு பொறுப்பு மேயரை விட்டுக் கொடுத்துள்ளது. அவங்க கட்சிக்காரங்களே வெறுப்படைந்துவிட்டார்கள். டிடிவி தினகரன் கருத்தை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். எடப்பாடியார் மைதானத்தில் ஓடி வெற்றிக்கான கோப்பையை பெரும் நிலையில் உள்ளார், ஆனால் மைதானத்தில் வேடிக்கை பார்ப்பவர் தான் டிடிவி தினகரன் அவரது பேச்சு வெட்டிப்பேச்சு ஆகும்.
இன்றைக்கு திமுகவை வீழ்த்தும் சக்தி அதிமுகவுக்கும், பழனிசாமிக்கும்தான் உள்ளது. அனைவரும் எங்கள் அணி திரண்டு வரவேண்டும். நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் அவர் ஜெயிக்க முடியும். இல்லையென்றால் ஆந்திராவில் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவருக்கு ஏற்படும். ஆனால் பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து இன்றைக்கு ஆந்திராவில் துணை முதல்வராக உள்ளார். விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்று மக்களும், அவரது தொண்டர்களும் உள்ளனர். திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்தால் தமிழக மக்களை மட்டுமில்லாது தவெக-வையும் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.” என்றார்.