ஆந்திராவில் ‘மோந்தா’ புயல் எப்போது கரையை கடக்கும்? – வட தமிழக பகுதிகளில் கனமழை, தரைக்காற்று எச்சரிக்கை | Cyclone Montha moving towards Kakinada in Andhra Pradesh

Spread the love

சென்னை: தீவிரப் புயலாக வலுப்பெறும் ‘மோந்தா’ புயல், ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் நாளை (அக்.28) மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கக் கூடும். அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (அக்.28) திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (அக்.26 காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு 11.30 மணி அளவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.27) காலை 8.30 மணி அளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 520 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 570 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு – தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது, வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.28) காலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மேலும், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப் புயலாக நாளை (அக்.28) மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கக் கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நேற்று (அக்.26) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்,27) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும், வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.

அக்.27: தமிழகத்தில் இன்று (அக்.27) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்.28: தமிழகத்தில் நாளை (அக்.28) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்.29 முதல் நவ.2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (அக்.27) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (அக்.28) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள்: அக்.27 மற்றும் அக்.28. தமிழகம், புதுவை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அக்.29-ல் வடதமிழகம் மற்றும் புதுவை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *