ஆந்திராவை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்துக்கு கனமழை அச்சம் நீங்கியது | Fear of heavy rains over for Tamil Nadu

1343949.jpg
Spread the love

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆந்திர கரையை நெருங்கும் என்பதால் தமிழகத்துக்கு கனமழை அச்சம் நீங்கியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும். பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து இன்று ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 21 முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பேசின் பாலம், கத்திவாக்கத்தில் 7 செ.மீ., பெரம்பூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, எண்ணூரில் 6 செ.மீ., நுங்கம்பாக்கம், ஜார்ஜ் டவுன், அமைந்தகரையில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திராவை நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு கனமழை அச்சம் நீங்கியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *