வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவும். இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில் ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
இதன் காரணமாக, இன்று (டிச.19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
20-ம் தேதி (நாளை) முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராஜபாளையத்தில் 9 செ.மீ. மழை: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 9 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 7 செ.மீ., வத்திராயிருப்பில் 5 செ.மீ., சிவகாசி, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோரில் 2 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றாறு, புத்தன் அணை, பெருஞ்சாணி அணை, விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியாறு அணை, ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.