ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இரு மாநில முதல்வர்களும் இன்று(ஜூலை 6) சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆந்திர பிரதேச மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்(2014) கீழ், இரு மாநிலங்களிடையே நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியுடன், அம்மாநில துணை முதல்வர் மல்லு பாட்டி விக்கிரமார்கா உள்பட இருமாநில அமைச்சர்களும் உடனிருந்தனர். தெலங்கானா தலைமைச் செயலர் சாந்தி குமாரி, ஆந்திர தலைமைச் செயலர் நீரப் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முக்கியமாக, இந்த ஆலோசனைக் கூட்டம் மூலம், ஒன்றுபட்ட ஆந்திர பிரதேச மாநிலமாக இருந்தபோது ஒரே மாநில அரசின்கீழ் செயல்பாட்டில் இருந்த அரசு நிறுவனங்களை இருமாநிலங்களுக்கும் பிரிப்பது, கோதாவரி, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணப்படுமென தெரிகிறது.