சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அக்.28-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 970 கி.மீ. தூரத்திலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது, மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (அக்.27) காலை, தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையும்.
பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ம் தேதி வாக்கில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகே தீவிரப் புயலாக 28-ம் தேதி மாலை அல்லது இரவில் கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 90-100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கிமீ வேகத்திலும் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் அக்.31-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இந்த புயலுக்கு ‘மோந்தா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும். நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 28-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் அக்.29-ம் தேதி வரை 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ., நாலுமுக்கில் 13 செ.மீ., காக்காச்சியில் 11 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பாலமோரில் 9 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 9 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு, மதுரை மாவட்டம் இடையப்பட்டி, மதுரை மாநகரம், தல்லாகுளத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முதல்வர் உத்தரவு: ‘மோந்தா’ புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாடு மையத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்.16-ம் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வருவாய்த் துறையின் கணக்குப்படி, அக்டோபர் 1 முதல் 24-ம் தேதி வரை 21.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவாக உள்ள ‘மோந்தா’ புயல், சென்னை அருகே வர வாய்ப்பு உள்ளது. அதன் தாக்கத்தால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் நிவாரண மையங்களை அமைத்து, தேவையான உணவுப் பொருட்களையும் தயாராக வைத்திருக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்குகிற அக்.1 முதல் 24-ம் தேதி வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 485 கால்நடைகள், 20,475 கோழிகள் உயிரிழந்துள்ளன. 1,280 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 2 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 210 பேர் தங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் எம்.சாய்குமார், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் பி.அமுதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.