ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று | Guidelines for fast issuance of building permit online

1336137.jpg
Spread the love

சென்னை: ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்கும் வகையில், தடையின்மை சான்று வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒற்றைச் சாளர திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் உத்தேச தடையின்மை சான்று வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா வெளியட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வணிகத்தை எளிதாக மேற்கொள்ளும் வகையிலும், தமிழக அரசால் ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு துறைகளிடம் இருந்து தடையின்மை சான்று வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யும் வகையில், ஒற்றைச் சாளர திட்டத்தில் தடையின்மை சான்று வழங்கும் துறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் உத்தேச தடையின்மை சான்று வழங்குதல் என இருவகையாக செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த நடவடிக்கையின் முதல்படியாக 19 துறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, உத்தேச தடையின்மை சான்று வழங்கும் வகையில், ஒவ்வொரு துறைக்கும் அதிகபட்ச காலவரையறை வகுக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளை பரிசீலித்த தமிழக அரசு, திட்ட அனுமதி வழங்கும் வகையில், நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் சம்பந்தப்பட்ட துறைகள் தடையின்மை சான்றுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியர்கள், நீலகிரி தவிர்த்த மற்ற பகுதிகளில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, மெட்ரோ ரயில், சிட்கோ, வீட்டுவசதி வாரியம், ஓஎன்ஜிசி, வேளாண் துறையினர் 30 நாட்களுக்குள் தடையின்மை சான்று வழங்க வேண்டும்.

தீயணைப்புத் துறையை பொறுத்தவரை உயரமான கட்டிடங்கள் என்றால் 30 நாட்கள், இதர கட்டிடங்களுக்கு 15 நாட்களுக்குள்ளும், மாநில நெடுஞ்சாலைத் துறை 15 நாட்களுக்குள்ளும் தடையின்மை சான்று வழங்க வேண்டும். மேலும், ஓஎன்ஜிசி, வேளாண்துறை, பாதுகாப்புத் துறை, வீட்டுவசதி வாரியம் ஆகிய துறைகளில் புவியியல் தகவல் அமைப்பு மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அதேநேரம் விண்ணப்பத்தை நிராகரித்தால் உரிய காரணங்களை பதிவு செய்ய வேண்டும். தடையின்மை சான்று என்பது விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். விண்ணப்பம் பெற்ற நாளில் இருந்து 7 நாட்களுக்குள் அதன் நிலை குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் விண்ணப்பித்த நாளில் இருந்து 10 நாட்களுக்குள் கோரப்பட வேண்டும். விண்ணப்பதாரருக்கு கூடுதல் ஆவணம் தயாரித்து வழங்க 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். கூடுதல் ஆவணங்கள் பெறப்படாத பட்சத்தில், விண்ணப்பித்த நாளில் இருந்து 30 வது நாளிலோ அதற்கு முன்னரோ நிராகரிக்கப்படலாம்.

உத்தேச தடையின்மை சான்று வழங்கப்படும் நாளில், சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் அதுகுறித்து குறுஞ்செய்தி அல்லது ஒற்றைச்சாரர திட்ட உள்நுழைவு வழியாக தெரிவிக்க வேண்டும். மேலும், திட்ட அனுமதியில், உத்தேச தடையின்மை சான்று அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறி்ப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பாதுகாப்புத் துறை, இந்திய விமானப்படை, விமான நிலைய ஆணையம், இந்திய தொல்லியல் துறை, தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தெற்கு ரயில்வே ஆகியவற்றில் இருந்து தடையின்மை சான்று பெறப்பட வேண்டியிருந்தால், திட்ட அனுமதிக்கு முன்னதாகவே பெறப்பட வேண்டும்.

கடற்கரை ஒழுங்கு முறை ஆணையத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டியிருந்தால், அதை பெற்ற பின்னரே கட்டிட அனுமதி வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நிலத்தில் மின்வாரியத்தின் மிக உயர் அழுத்த மின்தடங்கள் செல்லுமாயின், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தடையின்மை சான்று பெற வேண்டும். இந்த விதிகளை திட்ட அனுமதி வழங்கும் அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் ஆகியவை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *