ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் மீது நடவடிக்கை: சைபர் க்ரைம் போலீஸூக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | HC bench insists cyber crime police to act on online crackers advertisement

1375377
Spread the love

மதுரை: ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக விளம்பரங்களை வெளியிடுவேர் மீது அளிக்கப்படும் புகாரை சைபர் க்ரைம் போலீஸ் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜ சந்திரசேகரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் 2019-ல் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக விளம்பரங்கள் அதிகளவில் வெளியிடப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். எனவே, ஆன்லைன் பட்டாசு விற்பனை மற்றும் அது தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதித்தும், ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக விளம்பரங்களை வெளியிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சுந்தர மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுபாஷ்பாபு வாதிட்டார். மத்திய, மாநில அரசுகள் தரப்பில், ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, மனுதாரர் சைபர் க்ரைம் எஸ்பியிடம் புதிதாக புகார் அளிக்க வேண்டும். அந்த புகார் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *