அமெரிக்காவில் உள்ள ஒரு சில பணக்காரர்களிடையே, ஆபத்தான அதிகாரக் குவிப்பு நிலை உருவாகி வருவதாக அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அதிபர் பதவியிலிருந்து விலகும் ஜோ பைடன்.
அதிபர் பதவியிலிருந்து இன்னும் ஒரு சில நாள்களில் விலகவிருக்கும் ஜோ பைடன், ஓவல் அலுவலகத்திலிருந்து நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரையை புதன்கிழமை ஆற்றினார்.
அப்போது, அமெரிக்காவில், ஒரு சில பணக்காரர்களிடையே ஆபத்தான அதிகாரக் குவிப்பு போன்ற நிலை உருவாகி வருவதாகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய சொத்துகளுடன், அதிகாரம் மற்றும் செல்வாக்குடன் தன்னலக்குழு ஒன்று உருவாகி வருகிறது. இது நாட்டின் ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தையும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளுக்கு எதிரான அச்சுறுத்தலாக நிற்கிறது என்று கூறியுள்ளார்.
தற்போது இவர்கள் மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களால் அமெரிக்க மக்கள் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். செல்வந்தர்களிடையே குவியும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகத்துக்குத்தான் வழிவகுக்கும். மறுபக்கம் ஊடக சுதந்திரமும் மறுக்கப்படுகிறது, உண்மையான செய்திகளை வெளியிடுவோர் மெல்ல காணாமல் போய்விடுகிறார்கள். பொய்களால் உண்மை மறைக்கப்படுகிறது என்றார்.
திக்கி திக்கிப் பேசும் குழந்தை ஒன்று, ஸ்கிராண்டன், பென்சில்வேனியா போன்ற பகுதிகளிலிருந்து, தற்போது அமெரிக்க அதிபராக ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருப்பது என்பது, உலகின் வேறு எங்கும் நடக்காத சாதனையாகும். நான் இந்த நாட்டின் மீது என்னுடைய முழு அன்பையும் அர்ப்பணித்திருக்கிறேன். அதற்கு ஈடாக, அமெரிக்க மக்களும் தங்களுடைய முழு அன்பை எனக்கு செலுத்தினார்கள், அவர்களது ஆசியைப் பெற்றுள்ளேன் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில், புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறார். முன்னதாக, அன்றைய தினமே, வெள்ளை மாளிகையிலிருந்து ஜோ பைடன் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.