“ஆபத்தான மனநிலை” – ‘₹’ லோகோ விவகாரத்தில் தமிழக அரசு மீது நிர்மலா சீதாராமன் கடும் விமர்சனம் | Nirmala Sitharaman dig at DMK over rupee symbol move

1354194.jpg
Spread the love

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரபூர்வ ரூபாய் சின்னமான ‘₹’-ஐ தமிழக அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரபூர்வ ரூபாய் சின்னமான ‘₹’-ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது.

திமுகவிற்கு உண்மையிலேயே ‘₹’ உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, ​​இந்த சின்னம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

‘₹’ சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என்.தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.

மேலும், ரூபாய் என்ற வார்த்தை ‘வெள்ளியால் செய்யப்பட்ட’ அல்லது ‘வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்’ என்று பொருள்படும் ‘ருப்யா’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, ‘ரூபாய்’ என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது.

இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரபூர்வமாக ‘ரூபாய்’ அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன.

‘ரூபாய்’ என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.

ரூபாய் சின்னம் ‘₹’ என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. UPI-ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.

இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல – இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது” இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

லோகோ சர்ச்சை என்ன? – தமிழகத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில், தேவநாகரி எழுத்தில் உள்ள மத்திய அரசின் ரூபாய் குறியீட்டை மாற்றி, ‘ரூ’ என்ற தமிழ் எழுத்துடன் கூடிய இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற வாசகத்துடன் ‘சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட’ என குறிப்பிட்டு ரூபாய் குறியீடுக்கு பதிலாக ‘ரூ’ என்ற இலச்சினையை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இந்திய ரூபாய்க்கென தனிக் குறியீடு கடந்த 2010-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதனை வடிவமைத்தவர் தமிழரான உதயகுமார் ஆவார். இந்நிலையில், அவர் வடிவமைத்த தேவநாகரி எழுத்தில் உள்ள ரூபாய் குறியீடு இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இதுவரை பட்ஜெட்டில் அந்த குறியீடே பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கூட தமிழக பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு தமிழக பட்ஜெட் இலச்சினை ‘ரூ’ என மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ரூபாய் குறியீடு பட்ஜெட் இலச்சினையில் மாற்றப்பட்டிருப்பதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தேசிய ரூபாய் குறியீட்டை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல்முறை என்றும், மத்திய அரசின் மீதான எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *