ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்து பேரணி நடத்திய முதலமைச்சர் கச்சத்தீவை மீட்பதற்கு பெரிய மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா என சீமான் கேள்வி எழுப்பினார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, தமிழக அதிரடி படையால் சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து, மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே மூலக்காட்டில் சந்தன கடத்தல் வீரப்பனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 18-ம் தேதி வீரப்பனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நினைவு நாள் அனுசரித்து, அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மூலக்காட்டில் உள்ள வீரப்பனின் சமாதியில் 21-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வீரப்பன் மகள் வித்யாராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பின்னர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது : திமுகவும், அதிமுகவும் வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட மாட்டார்கள். ஆனால் எல்லா கட்டிடங்களுக்கும் கலைஞர் பெயரை சூட்டுகிறார்கள். தமிழர்களின் அடையாளங்களை மறைத்தால் தான் அது திராவிடர்கள், இந்தியர்கள். இது ஒரு போர். தமிழர்களின் அடையாளங்களை அழிக்கிறார்கள். திரும்பத் திரும்ப வீரப்பனுக்கு நினைவிடம் கட்டுவதை புறந்தள்ளுகிறார்கள். நான் வந்து கட்ட வேண்டும் என்று விட்டு வைத்திருக்கிறேன். அவர்கள் கட்டினாலும் இடிப்பேன்.
குஜராத்தில் ஒரு மீனவரை பாகிஸ்தான் ராணுவ கடற்படை கைது செய்திருந்தது. இந்திய கடற்படை ராணுவம் விரட்டிப் பிடித்து மீட்டுக் கொண்டு வந்தது. ஆனால், தமிழக மீனவர்களை கைது செய்யும்போது கடற்படை ராணுவம் எதுவும் செய்வதில்லை. எங்கள் உயிர் போவது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் மக்கள் அவர்களுக்கு தான், ஓட்டு போடுவார்கள் அவர்களுக்கே அதிகாரம் கொடுப்பார்கள். நமது முதல்வர் கடிதம் எழுதுகிறார். 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், அவர்களை வைத்து பேசி கச்சத்தீவை மீட்டு எடுக்கலாம்.
ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்தி பேரணி நடத்திய முதல்வர், கச்சத்தீவை மீட்பதற்கு ஒரு பெரிய மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா? நீங்கள் தானே கச்சத்தீவை எழுதி கொடுத்தீர்கள். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கூறுவது நாடகம். கேட்டால் கடிதம் எழுதினேன் வேறு என்ன செய்ய முடியும் என்பார். நீங்கள் முதலமைச்சரா அல்லது போஸ்ட்மேனா? அஞ்சல் துறை தலைவரா? ஈமெயில், இன்டர்நெட், இன்ஸ்டாகிராம் இருக்கும் காலத்தில் கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.