மேட்டூர்: ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்துப் பேரணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை மீட்பதற்கு மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா? என சீமான் கேள்வி எழுப்பினார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, தமிழக அதிரடிப் படையால் சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே மூலக்காட்டில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 18-ம் தேதி வீரப்பனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நினைவு நாள் அனுசரித்து, அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம். இந்நிலையில், இன்று மூலக்காட்டில் உள்ள வீரப்பனின் சமாதியில் 21-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வீரப்பன் மகள் வித்யாராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைக்கவும், வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கோஷங்கள் எழுப்பினர்.இதன் பின்னர் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பின்னர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: திமுகவும், அதிமுகவும் வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட மாட்டார்கள். எங்கள் அண்ணன் தமிழரசனுக்கு மட்டும் நினைவிடம் கட்டி விட்டார்களா?. ஈழத் தமிழர்களுக்காக போராடி இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்த முடிகிறதா?. ஆனால் எல்லா கட்டிடங்களுக்கும் கலைஞர் பெயரை சூட்டுகிறார்கள்.
தமிழர்களின் அடையாளங்களை மறைத்தால் தான் அது திராவிடர்கள், இந்தியர்கள். இது ஒரு போர். தமிழர்களை அடையாளம் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று நடத்தப்படும் போர். திரும்பத் திரும்ப வீரப்பனுக்கு நினைவிடம் கட்டுவதை தள்ளிப்போடுகிறார்கள். நான்வந்து கட்டவேண்டும் என்று விட்டு வைத்திருக்கிறேன். அவர்கள் கட்டினாலும் இடிப்பேன்.
குஜராத்தில் ஒரு மீனவரை பாகிஸ்தான் ராணுவ கடற்படை கைது செய்திருந்தது. இந்திய கடற்படை ராணுவம் விரட்டிப் பிடித்து மீட்டுக் கொண்டு வந்தது. ஆனால், தமிழக மீனவர்களை கைது செய்தபோது கடற்படை ராணுவம் எதுவும் செய்வதில்லை. தமிழர்கள் உயிர் போவது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் மக்கள் அவர்களுக்கு தான், ஓட்டுப் போடுவார்கள் அவர்களுக்கே அதிகாரம் கொடுக்கும். நமது முதல்வர் கடிதம் எழுதுகிறார். 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், அவர்களை வைத்துப் பேசி கச்சத்தீவை மீட்டு எடுக்கலாம்.
ஆபரேஷன் சிந்தூரை வாழ்த்தி பேரணி நடத்திய முதல்வர், கச்சத்தீவை மீட்பதற்கு ஒரு பெரிய மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா?. நீங்கள் தானே கச்சத்தீவை எழுதிக் கொடுத்தீர்கள். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கூறுவது நாடகம். கேட்டால் கடிதம் எழுதினேன் வேறு என்ன செய்ய முடியும் என்பார். நீங்கள் முதல்வரா அல்லது போஸ்ட்மேனா? அஞ்சல் துறை தலைவரா?. இ மெயில், இன்டர்நெட் இன்ஸ்டாகிராம் இருக்கும் காலத்தில் கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமியை திராவிடம் என்றால் என்ன என்று விளக்கிப் பேச சொல்லுங்கள், அதன் பிறகு வாரிசு என்பது குறித்து பேசட்டும். திராவிடம் என்றால் என்ன என்பது குறித்து ஒரு முடிவுக்கு வரச் சொல்லுங்கள். தமிழர் அல்லாதோர் இங்கு பாதுகாப்பாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்ட ஒன்று திராவிடம்.
உதயநிதி செங்கல்லை தூக்கிக்கொண்டு சென்றது போல், எடப்பாடி பழனிசாமி அல்வாவை தூக்கிக்கொண்டு செல்கிறார். நான் வந்தால் அல்வா தான் கொடுப்பேன் என்கிறார். அண்ணாமலைக்கு ரசிகர் மன்ற கொடி அறிமுகப்படுத்தியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நடிகருக்கு இருக்கும்போது அண்ணாமலைக்கு வரக்கூடாதா?’ என தெரிவித்தார்.