சென்னை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்ததால்தான் களத்தில் உத்வேகத்துடன் செயல்பட முடிந்தது என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.
சென்னை ஐஐடியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மையமான ‘அக்னிஷோத்’ தொடக்க நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. ராணுவ தளபதி உபேந்திர திவேதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மையத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அடுத்த நாளான 23-ம் தேதி சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றோம். பதிலடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் அனைவரும் தெளிவாக இருந்தோம். என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க அரசிடம் இருந்து முழு சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் முழுமையான நம்பிக்கை, அரசியல் தெளிவு கிடைத்ததால், ராணுவ தளபதிகள் களத்தில் விருப்பப்படி செயல்பட முடிந்தது.
இந்த சந்திப்புக்கு 2 நாட்களுக்கு பிறகு, தீவிரவாத இலக்குகளை எவ்வாறு தாக்குவது என்பது குறித்து ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குகளை முடிவு செய்தோம். திட்டமிடப்பட்ட 9 இலக்குகளில் 7 முக்கிய இலக்குகளை முழுவதும் அழித்தோம். இதில், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இரண்டே வார்த்தை, ஒட்டுமொத்த தேசத்தையும் ஒருங்கிணைத்தது. அதனால்தான் மொத்த நாடும் எங்களுக்கு ஆதரவாக இருந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு சதுரங்க விளையாட்டுபோல இருந்தது. ஏனென்றால், எதிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும், என்ன செய்யப் போகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. எதிரிகளும் சதுரங்க நகர்வுகளை செய்து வந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து ‘செக்’ வைத்துக்கொண்டு இருந்தோம்.
உரி, பாலகோட் போன்ற முந்தைய பதிலடி தாக்குதலில் இருந்துவேறுபட்டது ஆபரேஷன் சிந்தூர். உரி நடவடிக்கையின்போது,ஏவுதளங்களை குறிவைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. 2019-ம்ஆண்டு பாலகோட் தாக்குதல்களில், பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்மு காஷ்மீர் வழியாக ஊடுருவி பாகிஸ்தானுக்குள் பயிற்சி முகாம்களை தாக்குவதே நோக்கமாக இருந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் எதிரியின் பகுதிக்குள் ஆழமாக சென்று தாக்குதல் நடத்தப்பட்டது. நாங்கள் எதிரியின் மையப்பகுதியை அடைந்தது இதுவே முதல் முறை. இதுதான் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், இந்த மோதலில் தாங்கள் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் கதை கூறிவருவதுதான் வேடிக்கை.இவ்வாறு அவர் பேசினார்.