பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 47 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தானின் ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா நகரத்துக்கு அருகில், கடந்த ஆக.7 நள்ளிரவு முதல் ஆக.8 அதிகாலை வரையில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில், 33 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில், சம்பஸாவை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று (ஆக.8) நள்ளிரவு முதல் இன்று (ஆக.9) அதிகாலை வரையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் மேலும் 14 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்கள் கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசுடனான தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தனர்.
அதன் பிறகு, பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நாட்டின் ஒரே தங்கச் சுரங்கமும் இனி தேசியமயம்! நைஜர் ராணுவ அரசு அதிரடி!