தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் சதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே போக்குக்காட்டிய குர்பாஸ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2021ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு அறிமுகமான குர்பாஸ் அடித்த ஏழாவது சதம் இதுவாகும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவரது முதல் சதமாக பதிவானது. இந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் அவர் அடித்த இரண்டாவது சதமாகும்.
23 வயதை எட்டுவதற்கு முன்பு பல சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் குர்பாஸும் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தங்களின் 23-வது வயதுக்கு முன்னதாக தலா எட்டு சதங்கள் அடித்து பட்டியலில் இருவரும் முதலிடத்தில் உள்ளனர்.
இருப்பினும், குர்பாஸ் இப்போது விராட் கோலியின் சாதனையுடன் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பாபர் அசாம் மற்றும் உபுல் தரங்கா இருவரும் 6 சதங்கள் அடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தால் ஒட்டுமொத்த சாதனையை குர்பாஸ் சமன் செய்ய முடியும் என்றாலும், அவர் அதை முறியடிக்க வாய்ப்பில்லை. நவம்பர் 28 ஆம் தேதி அவருக்கு 23 வயதாகிறது. அதற்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு எந்த ஒருநாள் போட்டிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அவர் இப்போது ஆப்கானிஸ்தான் சார்பில் ஒட்டுமொத்தமாக அதிக சதமடித்தவர்களில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து முகமது ஷேசாத் உள்ளார்.
23 வயதிற்குள் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்கள்
-
குயின்டன் டி காக் – 8
-
சச்சின் டெண்டுல்கர் – 8
-
விராட் கோலி – 7
-
ரஹ்மானுல்லா குர்பாஸ் – 7
-
பாபர் அசாம் – 6
-
உபுல் தரங்கா – 6
-
அகமது ஷேசாத் – 5
-
ஷிம்ரன் ஹெட்மயர் – 5
-
இப்ராஹிம் ஜட்ரன் – 5
-
பால் ஸ்டெர்லிங் – 5