ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய கொலையாளிகள் ஆற்றில் வீசப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டு தடயவியல் துறையிடம் போலீசார் ஒப்படைத்ததை அடுத்து அடுத்து சிக்கப் போகும் பிரபல ரௌடி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 5-ஆம் தேதி சென்னை, பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த ரெளடி திருவேங்கடம், பூந்தமல்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் திருவேங்கடம் கடந்த 7-ஆம் தேதி என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.
கொலையாளிகளுக்கு ரூ.50 லட்சம் வழங்கியதாக மயிலாப்பூரைச் சோ்ந்த வழக்குரைஞா் மலா்க்கொடி, மற்றொரு வழக்குரைஞா் ஹரிஹரன், அருளின் உறவினா் சதீஷ் ஆகிய 3 போ் கடந்த 16-ஆம் தேதியும், கொலைக்கு நிதி உதவி செய்ததாக புளியந்தோப்பைச் சோ்ந்த ரெளடி அஞ்சலை கடந்த வெள்ளிக்கிழமையும் கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்ட அருள், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதும் கொலையாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை பெற்று, அதை தனது நண்பா் திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் 3-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினரான வழக்குரைஞா் ஜி.ஹரிதரன் (37) மூலம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் ஹரிதரனை சனிக்கிழமை பிடித்து விசாரணை செய்தனா். அதில், ஹரிதரன் அந்த செல்போன்களை உடைத்து திருவள்ளூா் மாவட்டம் வெங்கத்தூா் கொசஸ்தலை ஆற்றில் வீசி எறிந்ததாக தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து தீயணைப்புத் துறையின் ஆழ்கடல் நீச்சல் வீரா்களின் தேடுதல் பணி மூலம் ஆற்றிலிருந்து 3 செல்போன்களை போலீசார் மீட்டனா். ஹரிதரனை கைது செய்து, விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனா்.
ரெளடி அஞ்சலை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 5 செல்போன்கள், வங்கிக் கணக்கு ஆவணங்கள், பென்டிரைவ், லேப்டாப், ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தலைமறைவாக உள்ள வட சென்னையைச் சோ்ந்த ஒரு ரெளடியும், தாம்பரத்தைச் சோ்ந்த ஒரு ரெளடியும் நேபாளம் வழியாக மலேசியாவுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இது தொடா்பாகவும் போலீசார் விசாரணையில் நடத்தி வருகின்றனர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் திருவேங்கடம் இறந்துள்ளாா்.
இந்த நிலையில், மேலும் ஒரு செல்போனுடைய உதிரிபாகங்களை போலீசார் ஞாயிற்றுக்கிழமை மீட்டு, தடயவியல் துறையிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து தடயவியல் துறையினா் ரௌடி அஞ்சலை வீட்டில் இருந்து பறிமுதல் செல்போன், ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட செல்போன்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வரும் நிலையில் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய நபர்கள் சிக்கலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த வழக்கில் தொடா்புடைய சில முக்கிய குற்றவாளிகள், ஆந்திரம் மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவா்களைப் பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவா்கள் கைது செய்யப்பட்டால், கொலை தொடா்பான பல்வேறு முக்கிய தகவல்கள் மற்றும் முக்கிய கொலையாளிகள் சிக்குவதற்கு வாய்ப்புள்ளதாக காவல் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.