சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு உடையதாக கைது செய்யப்பட்ட ரவுடி, சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியை சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் பெரம்பூர் பொன்னுசாமி நகர் திருமலை (45), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மணிவண்ணன் (26), குன்றத்தூர் திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். அனைவரும் நீதிமன்ற காவலில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்டது பொன்னை பாலு. இவர், சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி.அண்ணன் கொலைக்கு பழிவாங்க, கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட 11 பேரையும்5 நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு எழும்பூர் நீதிமன்றம் கடந்த11-ம் தேதி அனுமதி வழங்கியது.
இதையடுத்து, சென்னை பரங்கிமலை பகுதியில் அவர்களிடம் தனித்தனியாகவும், குழுவாகவும் போலீஸார் விசாரணை நடத்தினர். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பொன்னை பாலு, 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த திருவேங்கடத்திடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் தகவல்களை திரட்டுவதற்காக திருவேங்கடத்தை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் நேற்று அதிகாலை போலீஸ்வாகனத்தில் அழைத்துச் சென்றனர். மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே சென்றபோது, திருவேங்கடம் திடீரெனதப்பி ஓடினார். வாகனத்தை நிறுத்திவிட்டு, போலீஸார் விரட்டி சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். புழல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் தகர ஷீட்டால் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்ததால், போலீஸார் சுற்றி வளைத்தனர். சரணடையுமாறு அவரை எச்சரித்தனர்.
ஆனால், அவர் கொட்டகையில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கி சுட்டார். இதில் சுதாரித்து தப்பிய ஆய்வாளர் முகமது புகாரி, தனதுதுப்பாக்கியால் சுட்டார். இதில் திருவேங்கடத்தின் வலது பக்க வயிறு, இடது பக்க மார்பில் 2 குண்டுகள் பாய்ந்தன. சுருண்டு விழுந்த அவரை போலீஸார் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதித்து, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக புழல் போலீஸார் 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
என்கவுன்ட்டர் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தவிர திருவேங்கடம் மீது 2 கொலை வழக்குகள், வழிப்பறி உட்பட 5 வழக்குகள் உள்ளன. அவரது வாக்குமூலம் அடிப்படையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை மணலியில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை கைப்பற்ற, தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் திருவேங்கடம் அழைத்து செல்லப்பட்டார்.
ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் இயற்கை உபாதைக்காக வாகனத்தை நிறுத்துமாறு கோரியதிருவேங்கடம், காவலர்களை தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார். வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.
காவல் ஆய்வாளர் தற்காப்புக்காக சுட்டதில், காயமடைந்த திருவேங்கடம் உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்கவுன்ட்டர் நடந்த இடத்தை வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர், இணை ஆணையர் விஜயகுமார், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவேங்கடம் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், 11 பேரில் ஒருவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.