சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதிட 2 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 -ம் தேதி ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகேந்திரன், அஸ்வத்தாமன் ஆகியோர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் தங்களுக்காக வாதிட வழக்கறிஞர் வைக்காமல் 8 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜராகி வாதிட மூத்த வழக்கறிஞர்களான ஆர்.ஸ்ரீனிவாஸ், சி.எஸ்.எஸ்.பிள்ளை ஆகியோர் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நாகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி, போலீஸார் 2 லட்சத்து 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வழங்கியுள்ளதாகவும், பென்-டிரைவில் பல பக்கங்களை காணவில்லை என்றும், ஜாமீன் பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் போலீஸார் இதுபோல முறைப்படுத்தாத ஆவணங்களை தங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அதையடுத்து அனைத்து ஆவணங்களையும் முறைப்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்க போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்.7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.