ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு | High Court orders medical examination of Nagendran arrested in Armstrong murder case

1372828
Spread the love

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு தொடர்பாக மருத்துவ பரிசோதனைகளை இன்று மேற்கொள்ள வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். சிறையில் நாகேந்திரன் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவருக்கு உரிய சிகிச்சை வழங்க கோரி அவரின் மனைவி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எம்.எஸ் ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகேந்திரனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவதற்கு அவரின் குடும்பத்தினர் 3 பேர் கல்லீரல் தானம் செய்ய தயாராக இருப்பதாகவும், அது தொடர்பாக நாகேந்திரன் குடும்பத்தினர் அளித்த விவரங்களை காவல் துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமேதரன் தாக்கல் செயதார்

நாகேந்திரன் உடல் நிலை குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவரை இன்று அனுமதித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதே வேளையில் நாகேந்திரனுக்கு கல்லீரல் தானம் செய்ய இருக்கும் குடும்பத்தினரின் உடல் நிலையை பரிசோதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த பரிசோதனைகளுக்கு பின்னர் நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என சிஎம்சி மருத்துவர்கள் அறிவுறுத்தினால், நாகேந்திரனுடன் அவருக்கு உதவியாக அவரின் குடும்பத்தினர் ஒருவர் மட்டும் உடன் இருக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், உடன் இருக்கும் குடும்ப உறுப்பினர் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *